×

முதல்வர் தனிப்பிரிவு உள்பட 3 துறைகளை ஒருங்கிணைத்து ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை துவக்கம்: அரசாணை வெளியீடு

சென்னை: முதல்வர் தனிப்பிரிவு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் உள்பட மூன்று துறைகளை ஒருங்கிணைத்து, ‘முதல்வரின் முகவரி’ என்று புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. இனிமேல் பொதுமக்கள் தங்கள் புகார், குறைகள், மனுக்களை இத்துறை கையாளும். இத்துறையின் சிறப்பு அலுவலராக, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதிஷ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை:  முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை ஆகிய அலுவலகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்படுகிறது.

முதலமைச்சர் தனிப்பிரிவின் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலுள்ள சிறப்பு அலுவலர் மற்றும் தனிப்பிரிவின் கீழ் தற்போதுள்ள பல்வேறு அலுவலக பிரிவு அலுவலர்கள் ‘முதல்வரின் முகவரி’ துறையின் கீழ் செயல்படுவர். தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பின், ஒரு முதன்மை பொதுக்குறை தீர்வு அலுவலர் பதவி ‘முதல்வரின் முகவரி’ துறை சிறப்பு அலுவலர் பதவியுடன் இணைக்கப்படுகிறது மற்றும் ஆறு பொதுக்குறை தீர்வு மேற்பார்வை அலுவலர்கள் இனி ‘முதல்வரின் முகவரி’ துறை சிறப்பு அலுவலரின் கட்டுப்பாட்டில் செயல்படுவார்கள்.

பொதுக்குறை தீர்வு மேற்பார்வை அலுவலர்களுக்கு தேவைப்படும் அனைத்து கட்டமைப்பு வசதிகள், தளவாடங்கள் மற்றும் பிற வசதிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் தொடர்ந்து வழங்கப்படும். தலைமை செயலகத்தில் ‘முதல்வரின் முகவரி’ துறைக்கு தேவைப்படும் அனைத்து உதவிகள் வழங்கும் ஒருங்கிணைப்பு துறையாக பொது(நிர்வாகம் 4 ) துறை செயல்படும். ‘முதல்வரின் முகவரி’ துறையின் மனுக்களுக்கு தீர்வு கான IIPGCMS helpline மாநிலம் முழுவதும் ஒற்றை இணையதள முகப்பாக பயன்படுத்தப்படும். இது ‘முதல்வரின் முகவரி’ துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

IIPGCMS helpline, தகவல் அழைப்பு மையம், 1100 என்ற தொலைபேசி எண், மனுக்கள் தொடர்பாக விசாரிப்பதற்காகவும், தகவல்கள் பெறுவதற்காகவும், மனுக்களை பதிவு செய்வதற்காகவும், மற்றும் இதர பணிகளுக்காகவும், இனி ‘முதல்வரின் முகவரி’ துறையின் கீழ் இயங்கும். இந்த இணையதளம் தொடர்பான அன்றாட செயல்பாடுகள் குறித்து ‘முதல்வரின் முகவரி’ துறையின் சிறப்பு அலுவலர் பொதுத்துறை செயலாளருடன் கலந்தாலோசித்து முடிவு செய்வார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதிஷ் முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Launch of a new department called ‘Chief’s Address’ combining 3 departments including the Chief Minister’s Private: Government Publication
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை