தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க மழைக் காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: மாநகராட்சி சுகாதாரத்துறை வெளியீடு

சென்னை: சென்னையில் தொடர் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில், தாழ்வான குடியிருப்பு பகுதி மற்றும் சாலைகளில் தேங்கிய நீரை ராட்சத மோட்டார்கள் மூலம் அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், மழைக்காலங்களில் பரவும் தொற்று நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், பிளீச்சிங் பவுடர் தெளிப்பது, கொசு மருந்து அடிப்பது போன்ற பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மழை வெள்ளம் வடிந்த பகுதிகளில் குப்பை கழிவுகளை அகற்றுவது, விழுந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது போன்ற பணிகளில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மழைக்காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு: மழைக்காலங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுத்திட பொதுமக்கள் 20 நொடிகள் முறையாக அடிக்கடி சோப்பு உபயோகப்படுத்தி கைகளை நன்கு தேய்த்து கழுவ வேண்டும். குடிநீரை 10 அல்லது 20 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைத்து, பின்னர் ஆற வைத்து பருக வேண்டும். சமைத்தவுடன் உணவினை சூடான நிலையிலேயே சாப்பிட வேண்டும். பழைய உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

மேலும் திறந்த வெளியில் மலம் சிறுநீர் கழிப்பதை தவிர்த்து, கழிப்பிடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெள்ள நீரில் நனைந்த உணவுப் பொருட்களை பயன்படுத்த கூடாது. காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனை, மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவரிடம் முறையான சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். சுயசிகிச்சை செய்யக் கூடாது.

வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி பேதி ஏற்பட்டால் உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் வீட்டிலுள்ள நீர் ஆகாரங்களை அடிக்கடி பருக வேண்டும். உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மேலும் குப்பை மற்றும் அழுகிய பொருட்களில் ஈக்கள் உற்பத்தியாகின்றன. எனவே வீட்டில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என்று பிரித்து தினமும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். தொற்று நோய் பரவாமல் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளது.

Related Stories:

More