×

எழும்பூர் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 68 குழந்தைகள் பிறந்தன: மகப்பேறு மருத்துவர்கள் தகவல்

சென்னை: எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில், கடந்த 12ம் தேதி மட்டும் (24 மணிநேரத்தில்) 68 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் 39 ஆண் குழந்தைகள், 29 பெண்கள் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். சென்னை எழும்பூரில் உள்ள மகப்பேறு நல மருத்துவமனையில் தினசரி 200 கர்ப்பிணிகள் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவிலும், 20 முதல் 30 கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக உள்நோயாளி பிரிவிலும் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், மகப்பேறு மருத்துவமனையில் (12ம் தேதி ) நேற்று முன்தினம் மட்டும் 24 மணி நேரத்தில் 68  குழந்தைகள் பிறந்துள்ளன.

இதுகுறித்து மருத்துவமனை இயக்குனர் டாக்டர் விஜயா கூறியதாவது: எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 முதல் 50 பிரசவங்கள் நடக்கும். ஏற்கனவே கடந்த ஆண்டில், இதைபோன்று ஒரே நாளில் நடந்த  பிரசவங்களில் 64 குழந்தைகள் பிறந்தது. அதேபோல் 11ம் தேதி 12 மணி முதல் 12ம் தேதி அதிகாலை 12 மணி வரை 68 குழந்தைகள் பிறந்துள்ளது. இதில் 39 ஆண் குழந்தைகள், 29 பெண்கள் அடங்கும். சென்னையில் பெய்த கனமழை காரணமாக தாம்பரம் உள்ளிட்ட புறநகர் மருத்துவமனைகளில் மழை நீர் தேங்கியதால், அங்கிருந்து பலர் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், மழையையும் பொருட்படுத்தாமல், டாக்டர்கள், நர்சுகள் யாரும் விடுமுறை எடுக்காமல் தீவிர பணியில் ஈடுபட்டனர். அவர்களது பணியும் பாராட்டுக்குறியதாகும். தற்போது, 68 குழந்தைகளும், தாய்மார்களும் நலமுடன் இருக்கின்றனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Egmore Government Hospital , 68 babies born in Egmore Government Hospital in one day: Gynecologists
× RELATED குழந்தை இறந்த விவகாரம் பெற்றோரின்...