கோவை மாணவி தற்கொலை வழக்கில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை.! அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

கோவை: கோவையில் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். கோவையில் உயிரிழந்த மாணவியின் பெற்றோரை இன்று நேரில் சந்தித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆறுதல் கூறினர்.

பின்னர், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், நீதி விசாரணை சரியான விதத்தில் நடைபெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். இதற்கு காரணமான ஆசிரியர் மீது, காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைதுசெய்துள்ளனர். அந்தப் பள்ளியின் முதல்வரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற நிலை இனி யாருக்கும் வரக்கூடாது என மாணவியின் தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வழக்கில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும்.

பெற்றோர், ஆசியர்கள், நண்பர்களிடம் கூற முடியாத விஷயங்கள், குறைகள், பிரச்சினைகளை பள்ளி மாணவர்கள் 14417 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். அவர்களுக்கு உதவ தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசு வேலை, இழப்பீடு வேண்டும் என உயிரிழந்த மாணவியின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவி எழுதியதாக வெளியான கடிதத்தில் உள்ளது தங்கள் குழந்தையின் கையெழுத்துதான் என பெற்றோர் தெரிவித்தால், அதுகுறித்தும் விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: