டி.20 உலககோப்பை பைனலில் நியூசிலாந்துடன் இன்று மோதல்; டாஸ் பற்றி அதிகம் கவலைப்படவில்லை: ஆஸ்திரேலியா கேப்டன் பிஞ்ச் பேட்டி

துபாய்: 7வது டி.20 உலக கோப்பை தொடரில் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பைனலில் ஆஸ்திரேலி யா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து சூப்பர் 12 சுற்றில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் அரைஇறுதிக்கு வந்தது. அரைஇறுதியில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்தியது. பேட்டிங், பந்துவீச்சு என வலுவான நிலையில் உள்ளது. 50 ஓவர் மற்றும் டி.20 போட்டிகளில் நியூசிலாந்து இதுவரை பட்டம் வென்றதில்லை. ஆனால் இன்று சாதிக்கும் முனைப்பில் உள்ளது. மேலும் 2015ம் ஆண்டு உலக கோப்பை பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. அதற்கு பழிதீர்க்கவும் காத்திருக்கிறது. 

மறுபுறம் 50 ஓவர் உலக கோப்பையை 5முறையும், சாம்பியன் டிராபியை 2முறையும் வென்ற ஆஸ்திரேலியா இதுவரை டி.20 உலக கோப்பை பட்டம் வென்றதில்லை. அதனையும் இந்தமுறை முத்தமிடும் உத்வேகத்தில் உள்ளது. அரையிறுதிக்கு ரன்ரேட் அடிப்படையில் வந்த ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை அரையிறுதியில் வீழ்த்தி அசத்தியது. வார்னர், ஜம்பா, மேத்யூவேட் ஆகியோரையே அணி பெரிதும் நம்பி உள்ளது.  முதன்முறையாக இரு அணிகளும் டி.20 கோப்பை சாம்பியன் பட்டம் வெல்ல பலப்பரீட்சை நடத்துகின்றன. எப்படி இருந்தாலும் டாஸ் தான் துபாயில் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக உள்ளது. 

பனியின்தாக்கம் இருப்பதால் 2வது பந்துவீசுவது கடினம். இந்த தொடரில் இங்குநடந்த 12 போட்டிகளில் 11ல் சேசிங் செய்த அணியை வென்றுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணியே  முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யும். ஐசிசி தொடரில் நாக்அவுட் போட்டிகளில் இதுவரை ஆஸ்திரேலியாவைநியூசிலாந்து வென்றதில்லை. இதுவரை 4 போட்டிகளில் மோதியதில் ஆஸ்திரேலியாவே வென்றுள்ளது. ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், இது ஒரு சிறந்த ஆட்டமாக இருக்கும். நியூசிலாந்து அருமையான அணி. கடந்த 6 ஆண்டுகளில் ஐ.சி.சி. நடத்திய பெரும்பாலான போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு வந்து இருக்கிறார்கள். 

எனவே அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது. பட்டம் வெல்லும் அணி என ஆரம்பத்தில் எங்களை யாரும்  கணிக்கவில்லை.ஆனால் எங்களுக்குள் நிறைய நம்பிக்கை இருந்தது, நாங்கள் போட்டியை வெல்வதற்கான தெளிவான திட்டத்துடன் வந்தோம், அதைச் செய்வதற்கான அணி எங்களிடம் இருப்பதாக நாங்கள் இன்னும் உணர்கிறோம். ட்ரென்ட் போல்ட்டின் இடது கை ஸ்விங் மற்றும் டிம் சவுத்தி  ஸ்விங் பந்தை எதிர்கொள்வது சவாலாக இருக்கும். டாஸ் பற்றி அதிகம் கவலைப்படவில்லை. நாங்கள் நல்ல ஸ்கோரை எடுத்தால் எதிரணிக்கு சேஸிங்கில் அழுத்தம் கொடுக்க முடியும் என்று நான் நினைக்கிறேன், என்றார். 

கான்வே இல்லாதது மிகப்பெரிய இழப்பு 

இன்றைய பைனல் ஆட்டம் குறித்து நியூசிலாந்து கேப்டன்  கேன்வில்லியம்சன் கூறியதாவது: உலக கோப்பை இறுதிப்போட்டியில் எங்களது  அண்டைநாடுடன் மோத இருப்பது  சிறப்பானது. உண்மையிலேயே இரு நாட்டு வீரர்களும் உற்சாகமடைந்துள்ளனர். ஒரு  அணியாக சாதிப்பதற்கு எங்களுக்கு இது இன்னொரு வாய்ப்பு. நாங்கள் எங்கள்  கிரிக்கெட்டில் கவனம் செலுத்துகிறோம் மற்றும் ஒரு பக்கமாக மேம்படுத்த  எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம். டெவோனின் இழப்பு மிகப்பெரியது,  அவர் எங்களுக்கு எல்லா வடிவங்களிலும் ஒரு பெரிய பகுதியாக இருந்தார், அது  ஏமாற்றமளிக்கிறது. இது உண்மையில் நடப்பது ஒரு வினோதமான விஷயம். ஆனால்  நாங்கள் பணியில் கவனம் செலுத்துகிறோம், என்றார். 

Related Stories:

More