×

கிருஷ்ணகிரி பஸ் நிலையம் அருகே சாலையில் மண் கொட்டி சீரமைத்த போக்குவரத்து போலீசார்: வாகன ஓட்டிகள் பாராட்டு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பஸ் நிலையம் அருகே பெரிய பள்ளங்கள் நிறைந்த முக்கிய சாலையை மண் கொட்டி சீர் செய்த நகர போக்குவரத்து போலீசாரை வாகன ஓட்டிகள் பாரட்டினர். கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு வருபவர்கள் ராயக்கோட்டை மேம்பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும். ராயக்கோட்டை மேம்பால பகுதியில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் முக்கிய சாலை பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும், குழியுமாக காணப்பட்டது. தற்போது பெய்து வரும் மழையால் சாலை மேலும் மோசமடைந்து, பஸ் நிலையத்திற்கு செல்லும் பஸ் ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த சாலையை சீர்செய்ய, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் கண்டு கொள்ளாத நிலையில், கிருஷ்ணகிரி போக்குவரத்து போலீஸ் எஸ்ஐக்கள் நாராயணன், சீதாராமன், மாரியப்பன் உள்ளிட்ட போலீசார் பள்ளங்களில் மண்ணை கொட்டி சீர் செய்தனர்.

இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், ‘தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய சாலையான இந்த சாலையை சீர்படுத்தக்கோரி, தேசிய நெடுஞ்சாலை துறையினரிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர் மழையால் பள்ளமான இந்த சாலைகளில் போக்குவரத்து பாதிப்பும், வாகன நெரிசலும் ஏற்படுவது தொடர்ந்ததால், நாங்களே பள்ளங்களில் மண்ணை கொட்டி சாலையை சீர் செய்துள்ளோம். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய அண்ணா நூற்றாண்டு வளைவு முதல் பஸ் நிலையம் வரை டிராக்டர்கள் மூலம் மண் எடுத்து வந்து பள்ளங்களை மூடி சரிசெய்துள்ளோம்,’ என்றனர். சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை போலீசாரே சரிசெய்வதை கண்ட வாகன ஓட்டிகள் பாராட்டினர்.

Tags : Krishnakiri , Traffic police clear dirt road near Krishnagiri bus stand: Motorists praise
× RELATED கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ்...