×

தொடர் மழையால் வத்தல்மலையில் திடீர் மண் சரிவு

தர்மபுரி: தொடர் மழை எதிரொலியாக தர்மபுரி வத்தல்மலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. பாறைகள் சாலையில் உருண்டதால் வேன், டிராக்டர், லாரி போன்ற பெரிய வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து, பாறைகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி வத்தல்மலையில் பெரியூர், பால்சிலம்பு, சின்னாங்காடு, குள்ளினூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. 5 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். சமீபத்தில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. 24 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இங்கிருந்து விவசாய விளை பொருட்களை தர்மபுரி, சேலம் சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். காலை- மாலை நேரங்களில் வேன் போன்ற பயணிகள் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வத்தல்மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது. வத்தல்மலை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், நேற்று முன்தினம் 6 இடங்களில் மண்சரிவு மற்றும் பாறைகள் உருண்டன. இதில் 8வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவுடன் ராட்சத பாறைகளும் உருண்டன.இதையடுத்து, சரிந்து விழுந்த மண் துகள்களை ஒதுக்கிவிட்டு டூவீலர், கார்கள் மட்டும் சென்று வந்தன. டிராக்டர், வேன் மற்றும் சிறிய லாரிகள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைபட்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி வட்டாட்சியர் ராஜராஜன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தன்ர.

இதையடுத்து, சாலையில் சரிந்த மண் துகள்கள் மற்றும் பாறைகளை அகற்றும்பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு மண்சரிவு மற்றும் பாறைகள் நேற்று அகற்றப்பட்டது. இதையடுத்து, மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு இதுபோன்று மண்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தது. இதுகுறித்து தர்மபுரி தாசில்தார் ராஜராஜன் கூறுகையில், ‘பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண்சரிவு மற்றும் பாறைகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. வாகனங்கள் சீராக சென்று வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என்றார்.

Tags : Wattalmalai , Sudden landslide in Wattalmalai due to continuous rains
× RELATED வத்தல்மலையில் அரசு பஸ் இயக்கி சோதனை ஓட்டம்-மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி