பாம்பன் பாலத்தில் மோதிய படகு கடலில் மூழ்கியது

ராமேஸ்வரம்: பாம்பன் பாலத்தில் மோதிய விசைப்படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது. இதில் 4 மீனவர்கள் உயிர் தப்பினர். வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருந்த நிலையில் மீன் பிடிக்க செல்லாமல் இருந்த மீனவர்கள் ஒரு வாரத்திற்கு பின் நேற்று காலை பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்றனர். ராமேஸ்வரம் அருகே மண்டபம் மீனவர் அம்ஜத்தின் விசைப்படகு, மண்டபம் தெற்கு மீன்பிடி துறையிலிருந்து வடக்கு கடல் பகுதிக்கு செல்வதற்காக நேற்று பாம்பன் கடல் பகுதிக்கு வந்தது.

கால்வாயில் கடல் நீரோட்டம் வழக்கத்தைவிட அதிகவேகத்தில் இருந்த நிலையில், படகு பாம்பன் ரயில் பாலத்தை கடந்து செல்ல முயன்றது. அப்போது பாம்பன் தூக்குப்பாலத்தின் மையப்பகுதியில் மோதியது. தொடர்ந்து கடல் நீரோட்டத்தின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டு தெற்குவாடி கடல் பகுதியில் மூழ்கியது. படகில் இருந்த 4 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டனர். மூழ்கிய படகை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

More