பர்கூர் மலைப்பாதையில் மீண்டும் நிலச்சரிவு; தமிழக கர்நாடக இடையே போக்குவரத்து துண்டிப்பு: தடுப்பூசி முகாம் பாதிப்பு.

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதையில் செட்டி நொடி என்ற இடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரட்டுப்பள்ளம் வனச்சசோதனை சாவடியில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பபட்டு வருகின்றன. ஏற்கனவே கனரக வாகனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் மலைப் பாதையில் செல்ல தடை விதித்திருந்த நிலையில்  இலகுரக, சிறிய சரக்கு வாகனங்கள் மற்றும் பேருந்து போக்குவரத்து மட்டும் நடைபெற்று வந்த நிலையில் இன்று மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பர்கூர் மலைப்பகுதியில் வாழும் மலைகிராம மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மேலும்  இன்று கொரோனோ தடுப்பூசி போடும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கு பணிக்காக வந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், ஊழியர்கள் அனைவரும் வன சோதனைச்சாவடியில் வந்து காத்திருந்தனர் தொடர்ந்து அவர்களின் உயர் அதிகாரிகளிடம் பேசி போக்குவரத்து சீராகும் வரை அருகிலுள்ள கிராமங்களுக்கு தடுப்பூசி பணிக்காக செல்ல அறிவுறுத்தியதையடுத்து அவர்கள் அருகிலுள்ள கிராமங்களுக்கு தடுப்பூசி செலுத்த சென்றனர்.

தொடர்ந்து சாலையில் விழுந்து கிடக்கும் பாறைகள்  வெடிவைத்து தகர்த்த பின்னரே போக்குவரத்து நிலைமை சீராகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் கட்டமாக அங்கு விழுந்து கிடந்த மரங்களை வனத்துறையினர் அகற்றினர். தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்படைந்து வருவதால் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள 32 கிராம மக்களும் அவசர தேவைக்காக அந்தியூர் வருவதற்கு கூட முடியாததன் காரணமாக, மாற்றுப்பாதை அமைத்து தரக்கோரி மலைப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த மாதம் இரண்டு முறையும் அதே போல் கடந்த 8- ஆம் தேதியும் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்படைந்தது குறிப்பிடத்தக்கது, தற்போது நான்காவது முறையாக நிலச்சரிவு ஏற்பட்டு தமிழகம் கர்நாடகா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.  தமிழக-கர்நாடக இடையே இவ்வழி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More