நாளை முதல் கட்டுப்பாடுகள் நீக்கம் புறநகர் மின்சார ரயில்களில் அனைவரும் பயணிக்கலாம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று முதல் அலை தீவிரமடைந்ததால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பொது போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அத்தியாவசிய பணியாளர்களின் வசதிக்காக மட்டும், சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்ததால், மின்சார ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது 630 மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.

இதில், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொது துறை நிறுவன ஊழியர்கள், ஐகோர்ட் மற்றும் மற்ற கோர்ட் ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல் பெண் பயணிகள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்றும், ஆண் பயணிகள் கூட்ட நெரிசல் அதிகம் இல்லாத சாதாரண நேரத்தில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா கட்டுபாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு, நாளை முதல் (15ம் தேதி) வழக்கம் போல் அனைத்து பயணிகளும் மின்சார ரயிலில் பயணிக்கலாம். சென்ட்ரல்-அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, வேளச்சேரி வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் கொரோனா கட்டுப்பாடின்றி பயணிக்கலாம். அதேபோல், தனி நபர், மாதந்திர, ரிட்டர்ன் டிக்கெட்டுகள் அனைவருக்கும் வழங்கப்படும். பயணிகள் கண்டிப்பாக சமூக இடைவெளி, முகக்கவசம் அணிய வேண்டும், என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Related Stories: