×

பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி புகார் சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு: பள்ளியில் உள்ள ரகசிய அறையை திறக்க சிபிசிஐடி திட்டம்

சென்னை: சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சிவசங்கர் பாபாவின் கைரேகையை பதிவு செய்து ரகசிய அறையை திறக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த சாத்தங்குப்பம் பகுதியில் ‘சுசில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி’ இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் நிறுவனராக பிரபல நடன சாமியாரான சிவசங்கர் பாபா (72) உள்ளார்.இவர் மீது மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 5 வழக்கு பதிவு செய்தனர். இதைதொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவை கடந்த ஜூன் 16ம் தேதி கைது செய்தனர்.

இந்லையில், கடந்த மாதம் சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கும், ஒரு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே, இவர் மீதான முதல் போக்சோ வழக்கில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது மற்றும் மூன்றாவது போக்சோ வழக்குகளுக்கான குற்றப்பத்திரிகையும் முடியும் தருவாயில் உள்ளது. நான்காவது வழக்கு மீது குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், தற்போது மேலும் ஒரு பாதிக்கப்பட்ட, அந்த பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், சிவசங்கர் பாபா மீது 5வது போக்சோ வழக்கை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் சிவசங்கர் பாபா மீது 5 போக்சோ வழக்குகள், ஒரு பெண் வன்கொடுமை வழக்கு என மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 5வது வழக்கிலும் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவின் பள்ளியில் உள்ள ரகசிய அறையில் முக்கிய ஆவணங்கள், வீடியோ ஆதாரங்கள் இருப்பதாக தெரிகிறது. எனவே, சுசில் ஹரி பள்ளியில் உள்ள அந்த ரகசிய அறையை இன்னும் ஓரிரு நாளில் சிபிசிஐடி போலீசார் திறக்க முடிவு செய்துள்ளனர். சிவகங்கர் பாபாவின் கைரேகை பதிவு இருந்தால் மட்டுமே ரகசிய அறையை திறக்க முடியும். இதற்காக, செங்கல்பட்டு நீதிமன்றத்தின் அனுமதியோடு பள்ளியில் உள்ள ரகசிய அறையை திறக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags : Sivashankar Baba ,CPCIT , Sivashankar Baba, Pokcho, Case, CPCIT
× RELATED சயானிடம் சிபிசிஐடி போலீசார் 8மணி நேரம் விசாரணை