பதில் சொல்லுங்கள்; விருதை திருப்பி தருகிறேன் 1947ல் எந்தப் போர் நடந்தது?: நடிகை கங்கனா சவால்

புதுடெல்லி: ‘1947ல் எந்தப் போர் நடந்தது? யாராவது பதில் சொல்லுங்கள், என் பத்ம விருதை திருப்பி தருகிறேன், மன்னிப்பும் கேட்கிறேன்,’ என நடிகை கங்கனா ரனாவத் சவால் விட்டுள்ளார். பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பத்ம விருதை பெற்ற அடுத்த 2 நாட்களில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘1947ல் பெற்றது சுதந்திரம் அல்ல. அது பிச்சை. 2014ம் ஆண்டில் தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது,’ என பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார். இது பெரும் சர்ச்சையானது. சுதந்திர போராட்டத்தை கொச்சைப்படுத்திய கங்கனாவின் பத்ம விருதை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கோரி வருகின்றனர். இந்நிலையில், தன்னை எதிர்ப்பவர்களுக்கு கங்கனா தனது இன்ஸ்டாகிராமில் நீண்ட பதிவு மூலம் சவால் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சுபாஷ் சந்திரபோஸ், ராணி லட்சுமிபாய், வீரசாவர்க்கர் போன்ற தலைசிறந்த சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்துடன் 1857ல் முதல் கூட்டுப் போராட்டம் தொடங்கப்பட்டது.  அதைப்பற்றி நான் அறிவேன். ஆனால், 1947ல் எந்தப் போர் நடந்தது? அதைப் பற்றி எனக்கு தெரியாது. யாருக்காவது அதைப் பற்றி தெரிந்திருந்தால் பதில் கூறுங்கள், நான் என் பத்ம விருதை திருப்பி தருகிறேன், மன்னிப்பும் கேட்கிறேன். எனக்கு உதவுங்கள். இந்தியாவை மொத்தமாக சூறையாடிய ஆங்கிலேயர்களுக்கு எதிராக நேதாஜியின் ஐஎன்ஏ படை சிறிய போரை நடத்தியிருந்தால்கூட வெற்றி பெற்றிருக்கும், நேதாஜி பிரதமர் ஆகியிருப்பார். வலதுசாரிகள் சண்டையிட்டு சுதந்திரத்தை வாங்க தயாராகிய நிலையில், காங்கிரசின் பிச்சை பாத்திரத்தில் சுதந்திரம் தரப்பட்டது ஏன்? இதைப் பற்றி எல்லாம் யாராவது எனக்கு புரிய வைக்க உதவுங்கள். இவ்வாறு கங்கனா கூறியுள்ளார்.

குவியும் வழக்குகள்

சுதந்திர போராட்டத்தை இழிவுபடுத்தியது தொடர்பாக நாட்டின் பல மாநிலங்களில் கங்கனா மீது போலீசில் புகார்கள் குவிகின்றன.  ராஜஸ்தான், உத்தரகாண்ட்,   மகாராஷ்டிராவில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புகார்  அளித்துள்ளன.

பகத் சிங்கை காந்தி ஏன் இறக்க விட்டார்?

‘வலதுசாரிகளால்தான் தேசப்பற்று  வளர்ந்தது. ஆனால், அவர்கள் ஏன் விரைவில் மடிந்தார்கள்? பகத்சிங்கை, காந்தி  ஏன் இறக்க விட்டார்? நேதாஜி ஏன் கொல்லப்பட்டார்? காந்தியின் ஆதரவு ஏன்  அவருக்கு கிடைக்கவில்லை? வெள்ளைக்காரர்களால் பிரிவினைக் கோடு வரையப்பட்டது  ஏன்? சுதந்திரத்தை கொண்டாடுவதற்கு பதிலாக இந்தியர்கள் ஒருவரை ஒருவர்  கொன்றது ஏன்?’ என்றும் கங்கனா தனது பதிவில் கூறியுள்ளார்.

Related Stories: