பெண் பலாத்கார முயற்சி விசாரணையின்போது இன்ஸ்பெக்டரை தாக்கி தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கிச்சூடு : மதுரை காவல் நிலையத்தில் பரபரப்பு

மதுரை:  மதுரை, அண்ணா நகர், காமராஜர் தெருவை சேர்ந்த 30 வயதான இளம்பெண், நேற்று முன்தினம் இரவு டூவீலரில், டெபுடி கலெக்டர் காலனியில் உள்ள மாமா வீட்டிற்கு உணவு கொண்டு சென்றார். உணவை கொடுத்து விட்டு திரும்பியபோது, அண்ணா நகர் செண்பகத்தோட்டத்தை சேர்ந்த ரவுடியான குருவி விஜய்(30), வண்டியூரை சேர்ந்த கார்த்திக் (எ) மௌலி(28) ஆகியோர் அந்த பெண்ணை மறித்து, ஆக்‌ஷா பிளேடை காட்டி மிரட்டினர்.  அப்போது, இளம்பெண் சத்தம் போடவே, அந்த பெண்ணின் மாமா ஓடிவந்து இருவரையும் தடுத்தார். அவரை கீழே தள்ளி விட்டு, பெண்ணை தங்களது டூவீலரில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் சென்றனர். அருகே நின்ற ஒரு வேனில் பெண்ணை ஏற்றி பலாத்காரம் செய்ய முயன்றனர். அந்த பெண்ணின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். காவல் கட்டுப்பாட்டு அறை வேன் வரவே குருவி விஜய், கார்த்திக் தப்பி ஓட முயன்றனர். போலீசார் இருவரையும் பிடித்து வேனில் ஏற்றி, அண்ணாநகர் காவல் நிலையம் கொண்டு வந்தனர். பெண்ணும் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார்.

காவல் நிலையத்தில் குருவி விஜய், கார்த்திக் ஆகியோரிடம், இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், எஸ்ஐ சிவராமகிருஷ்ணன் விசாரணை நடத்தினர். அப்போது, குருவி விஜய் ஆக்‌ஷா பிளேடை காட்டி தப்ப முயன்றார். தடுத்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமரனை, குருவி விஜய் தாக்கியதாகவும், இதில் அவரது மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதைத்தொடர்ந்து, எஸ்ஐ சிவராமகிருஷ்ணன், துப்பாக்கியால், குருவி விஜய்யின் வலது காலில் சுட்டார். நிலை தடுமாறிய அவர், கீழே விழுந்தார். அப்போது, காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓட முயன்ற கார்த்திக் கீழே விழுந்ததில் கால் எலும்பு முறிந்து காயம் ஏற்பட்டது. காயமடைந்த இருவரையும் போலீசார், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை இருவரையும் அண்ணாநகர் போலீசார் கைது செய்தனர். சிகிச்சை முடிந்ததும் இருவரும் சிறையில் அடைக்கப்படுவர் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: