×

உலக கோப்பை டி20ல் புதிய சாம்பியன் யார்? இறுதி போட்டியில் இன்று ஆஸி.-நியூசி. பலப்பரீட்சை

துபாய்: ஐசிசி  டி20 உலக கோப்பை பைனலில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள்  இன்று மோதுகின்றன. கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலக கோப்பை தொடர்  ஓமன், ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு மாற்றப்பட்டது. தகுதிச்சுற்று, சூப்பர்-12 சுற்று, அரையிறுதி ஆட்டங்கள் முடிந்து இன்றுடன் உலக கோப்பை முடிவுக்கு வருகிறது. துபாயில் இரவு 7.30க்கு தொடங்கும் பைனலில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஒசியானிக் பகுதியை சேர்ந்த பக்கத்து பக்கத்து நாடுகளான  இவை  முதல்முறையாக உலக கோப்பை பைனலில் சந்திக்கின்றன. டி20 உலக கோப்பை தொடர்களில் இது இந்த 2 அணிகள் மோதும் 2வது ஆட்டம்.  சூப்பர் 12 சுற்றின் இரு பிரிவிலும் முதலிடம் பிடித்த பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளை, அரையிறுதியில் மண்ணைக் கவ்வ வைத்து ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் பைனலுக்கு முன்னேறின.

ஐசிசி ஒருநாள் உலக கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி20 உலக கோப்பை என... தொடர்ந்து 3வது உலக கோப்பை பைனலில் விளையாடும் நியூசி. அணி மிகுந்த உற்சாகத்துடன் களமிறங்குகிறது. காயம் காரணமாக கான்வே விலகியது அந்த அணிக்கு சற்று பின்னடைவை கொடுத்துள்ளது. கொரோனா பரவலுக்கு பிறகு  நடந்த டி20 தொடர்களில் இங்கிலாந்து (2-1), இந்தியா (2-1), நியூசிலாந்து (3-2), வெஸ்ட் இண்டீஸ் (4-1) மற்றும் வங்கதேசத்திடம் (4-1) தோற்றிருந்த ஆஸ்திரேலியா, தற்போது உலக கோப்பை பைனல் வரை முன்னேறியது ஆச்சர்யம்தான். சூப்பர் 12 சுற்றில் ஒரு ஆட்டத்தில் கூட தோற்காத பாகிஸ்தானை அரையிறுதியில்  மண்டியிட வைத்தது யாரும் எதிர்பாராத ட்விஸ்ட். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்... என அனைத்திலும் சம பலம் வாய்ந்த அணிகள் மோதும் இன்றைய இறுதிப் போட்டி, கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), பேட் கம்மின்ஸ் (துணை கேப்டன்), ஆஷ்டன் ஏகார், டேன் கிறிஸ்டியன், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசல்வுட், ஜோஷ் இங்லிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மிட்செல் ஸ்வெப்சன், மேத்யூ வேடு, டேவிட் வார்னர், ஆடம் ஸம்பா. நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாட் ஆஸ்டில், மார்க் சாப்மேன், மார்டின் கப்தில், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், டிம் செய்பெர்ட், டிம் சவுத்தீ, டிரென்ட் போல்ட், கைல் ஜேமிசன், ஜிம்மி நீஷம், மிட்செல் சான்ட்னர், ஈஷ் சோதி, ஆடம் மில்னி.

நேருக்கு நேர்....

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இதுவரை 14 சர்வதேச டி20ல் மோதியுள்ளன. அவற்றில்  ஆஸி. 9-5 என முன்னிலை வகிக்கிறது. அதிகபட்சமாக ஆஸி. 245 ரன், நியூசி. 243 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக  நியூசி. 106 ரன், ஆஸி. 96 ரன் எடுத்துள்ளன. இதுவரை நடந்த 6 ஐசிசி டி20 உலக கோப்பையில், இரு அணிகளும் ஒரே ஒரு முறைதான் மோதியுள்ளன. இந்தியாவில் 2016ல் நடந்த உலக கோப்பை போட்டியில்,  தர்மசாலாவில் நடந்த லீக் ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூசி. 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆஸி. 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன் மட்டுமே எடுத்து 8 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

Tags : World Cup T20 ,Aussie ,Zealand , World Cup, T20, Champion Who, Aussie.-Newcy
× RELATED ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது