பாலியல் தொல்லையால் பிளஸ் 2 மாணவி தற்கொலை மேலும் 16 மாணவிகளுக்கு பாலியல் டார்ச்சர்: கைதான ஆசிரியர் பகீர் வாக்குமூலம்

கோவை: கோவை கோட்டைமேடு பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார்  பள்ளியில் படித்தபோது இயற்பியல் ஆசிரியரான ஆர்.எஸ். புரம் லாலி ரோட்டை  சேர்ந்த மிதுன் சக்ரவர்த்தி (35) பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதன் காரணமாக, மாணவி கடந்த 11ம் தேதி வீட்டில், மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த  சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை கைது செய்ய வேண்டும். அதுவரை மாணவியின் உடலை வாங்கமாட்டோம் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவோடு இரவாக ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, உடுமலை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.  

கைதான மிதுன்  சக்ரவர்த்தி, மேலும் பல திடுக்கிடும் தகவல்களை  கூறியுள்ளார். அதே தனியார் பள்ளியில் மேலும் 16 மாணவிகளுக்கு அவர்  போட்டோ, மெசேஜ் அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக விசாரணையில்  தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இவரது அத்துமீறலை சகிக்க முடியாமல், பல மாணவிகள் புலம்பி  வந்துள்ளனர். ஆன்லைன் வகுப்பு இருந்ததால், இவரது செல்போன் எண்ணை மாணவிகள்  ‘‘பிளாக்’’ செய்ய முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி,  மிதுன் சக்ரவர்த்தி பாலியல் தொல்லையை தொடர்ந்துள்ளார்.

குற்றவாளிகளை  கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவில், கோவை  மாணவியின் மரணம் மனதை வருந்த செய்துள்ளது. சில மனித மிருகங்களின்  வக்கிரமும், வன்மமும் ஒரு உயிரை பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள்  நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதிசெய்ய வேண்டும். குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி  செய்வோம் என தெரிவித்துள்ளார்.

பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை: கனிமொழி எம்பி வலியுறுத்தல்

பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார். திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி வெளியிட்ட டிவிட்டர் பதிவு:ஆசிரியர் கொடுத்த, பாலியல் தொல்லைக் காரணமாகக் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பதற வைக்கிறது. தனக்கு நேர்ந்த தொடர் பாலியல் தொல்லை பற்றி பலமுறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் குரலுக்குச் செவி கொடுத்திருந்தால், குற்றம் நிகழ்வதைத் தக்க நேரத்தில் தடுத்திருக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கதவை உடைத்து உள்ளே நுழைந்த காதலன்

தற்கொலை செய்த மாணவி, கோவையை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவனிடம் பழகி வந்துள்ளார். அந்த மாணவனிடம் அடிக்கடி செல்போனில் தொடர்புகொண்டு, தனக்கு    நேர்ந்த அவலம் பற்றி பேசியுள்ளார். வாட்ஸ்அப்பில் நிறைய மெசேஜ்    அனுப்பியுள்ளார். தற்கொலை    செய்வதற்கு முன் மாணவனை செல்போனில் தொடர்புகொண்டு, ‘‘நான் தற்கொலை செய்யப்போகிறேன். நீ என்னை இனிமேல் பார்க்க முடியாது’’ எனக்கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து அந்த மாணவன், பைக்கை எடுத்துக்கொண்டு மாணவியின் வீட்டு பக்கம் சென்றுள்ளார். வீட்டுக்கு வெளியே  மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை பார்த்து திடுக்கிட்டார். உடனே அந்த மாணவன், கதவை உடைத்து உள்ளே நுழைந்தார். அங்கு,  மாணவி, மின்விசிறியில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி  அழுதார்.

Related Stories:

More