குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து கடற்கரை பகுதியில் உருவாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இதனால், விவசாய பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி நாசமானது. அதே போல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த மழை பாதிப்பில் இருந்து மக்கள் மீளாத நிலையில் மீண்டும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக மீண்டும் தமிழகத்தில் இன்று முதல் கனமழை ெபய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது: வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (3.6 கிலோ மீட்டர் உயரம் வரை) காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சேலம், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 15ம் தேதி (நாளை) தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

16, 17 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கன்னிமாரில் 14 சென்டி மீட்டர் மழை ெபய்துள்ளது. தக்கலை, சுரலா கோடு 13 செ.மீ, சிவலோகம், பெருஞ்சாணி அணை 12 செ.மீ, புத்தன் அணை 11 செ.மீ, இரணியல், நாகர்கோவில் 10 செ.மீ, குழித்துறை, சித்தார், கொட்டாரம், பேச்சிப்பாறை தலா 9 செ.மீ, மயிலாடி, பூதப்பாண்டி 7 செ.மீ, சின்னக்கல்லார், குளச்சல் 5 செ.மீ, சூளகிரி, கன்னியாகுமரி, ராதாபுரத்தில் 4 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து கடற்கரை பகுதிகளில் உருவாகியுள்ளது. இதனால் இன்று குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும்; இன்றும், நாளையும் மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், 16, 17ம் தேதிகளில் மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.  இன்று தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: