தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036வது சதயவிழா கோலாகலம்: பெருவுடையாருக்கு 36 வகை அபிஷேகம்

தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036ம் ஆண்டு சதயவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி பெருவுடையார் சுவாமிக்கு 36 வகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று 2 நாட்கள் சதய விழா என்ற பெயரில் சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக, விழா பக்தர்களின்றி நடந்தது.

எனினும் பெருவுடையாருக்கு அபிஷேகம் மற்றும் பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு மட்டும் நடைபெற்றது. இந்த ஆண்டும் தொற்று முன்னெச்சரிக்கை காரணமாக, 1036ம் ஆண்டு சதய விழா இன்று (13ம் தேதி) ஒரு நாள் மட்டும் நடக்கிறது. இதையொட்டி கடந்த 8ம் தேதி பந்தல்கால் நடப்பட்டது. சதயவிழா இன்று காலை 6.30 மணிக்கு மங்கள இசையுடன் துவங்கியது. காலை 7.30 மணிக்கு கோயில் குருக்கள் மற்றும் ஊழியர்களுக்கு புத்தாடைகளை திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதினத்தின் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கினார்.

காலை 8 மணிக்கு பெரிய கோயிலுக்கு வெளியே உள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சதய விழாக்குழு தலைவர் செல்வம், துணைத்தலைவர் மேத்தா, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கிருஷ்ணன், செயல் அலுவலர் மாதவன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் தருமபுரம் ஆதீனம் உபயத்தில் பெருவுடையார், பெரியநாயகி திருமேனிக்கு வில்வம், விபூதி, தைலக்காப்பு, சாம்பிராணி தைலம், நவகவ்யம், திரவியப்பொடி, அரிசிமாப்பொடி, பஞ்சாமிர்தம், தயிர், பால், நெய், தேன், மாதுளை, பலாச்சுளை, ஆப்பில், அன்னாசி, திராட்சை, நார்த்தம்பழச்சாறு, சாத்துக்குடி, எலுமில்லை, கருப்பஞ்சாறு, இளநீர், சந்தனம், பன்னீர், சொர்ணம், மலர்கள் உள்ளிட்ட 36 வகை பொருட்களால் அபிஷேகம் சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகள், மாமன்னர் ராஜராஜ சோழன் சிலையுடன் கோயில் பிரகாரத்திற்குள் உலா நடைபெறும்.

Related Stories: