சுதந்திரம் குறித்து சர்ச்சை கருத்து; நடிகை கங்கனா மீது வழக்கு: ராஜஸ்தான் போலீஸ் அதிரடி

ஜெய்ப்பூர்: இந்திய சுதந்திரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு எதிராக ராஜஸ்தானில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். பாலிவுட் நடிகை கங்கனா சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘ஆங்கிலேயர் ஆட்சியின் நீட்சிதான் காங்கிரஸ். 1947ம் ஆண்டில் பெற்றது சுதந்திரம் அல்ல; அது பிச்சை. 2014ம் ஆண்டில் தான் எங்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது. பிச்சை எடுத்து சுதந்திரம் வந்தால், அது உண்மையான சுதந்திரமாக இருக்க முடியுமா?’ என்றார். இவரது பேச்சு தேசிய அரசியலில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பலரும் கங்கனாவுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பி வரும் நிலையில், தற்போது அவருக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீவிருதை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பலர் இந்தக் கோரிக்கையை முன்வைத்து வருவதால் கங்கனாவுக்கு சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் போலீசில் கங்கனாவுக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் பல நகரங்களில் கங்கனாவுக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ராஜஸ்தானில் மட்டும் ஜெய்ப்பூர் கோட்வாலி, உதய்பூர் சுகேர், ஜோத்பூரில் உள்ள சாஸ்திரி நகர், சுரு கோட்வாலி, பில்வாரா, பாலி கோட்வாலி ஆகிய காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெய்ப்பூரில் நகர மகிளா காங்கிரஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்வாலி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்’ என்றனர்.

Related Stories: