ரூ8,144 கோடியை கொள்ளையடித்து விட்டனர்; எடப்பாடி பழனிசாமியை கைது செய்ய வேண்டும்: பெங்களூர் புகழேந்தி வலியுறுத்தல்

சேலம்: ரூ8,144 கோடி பணத்தை கொள்ளையடித்த எடப்பாடி பழனிசாமியை உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பெங்களூர் புகழேந்தி தெரிவித்துள்ளார். சேலத்தில் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு கொடுத்த ரூ6,744 கோடி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ900 கோடி, கூடுதல் பட்ஜெட்டில் ரூ500 கோடி என ரூ8,144 கோடி பணத்தைக்கொண்டு சென்னையில் மழைவெள்ளப்பாதிப்புகளை கட்டுப்படுத்த திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம், இனி புயலே வந்தாலும் சென்னையில் தண்ணீர் தேங்காது, 954 கால்வாய்களை சீர் செய்துள்ளோம் என எடப்பாடி பழனிசாமி தேர்தல் நேரத்தில் கூறினார்.

அவர் கூறிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் இப்போது சென்னை நகரமே தண்ணீரில் மிதக்கிறது. அப்படியானால் ரூ8,144 கோடி பணம் எங்கே போனது?. சென்னை மாநகராட்சி கமிஷனர், இன்ஜினியர்கள், எடப்பாடி பழனிசாமி, வேலுமணி ஆகியோர் கொள்ளையடித்து விட்டனர். எடப்பாடி பழனிசாமி பேசியதை ஆதாரமாக வைத்து அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து உடனடியாக அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும்.

தமிழக முதல்வர் இதில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 4 ஆண்டு அதிமுக ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை. இவ்வளவு பணம் ஒதுக்கியும் வேலுமணி கூடுதலாக பணம் ஒதுக்க வேண்டும் என்றார். மாஜி மந்திரிகள் வீடுகளில் விஜிலென்ஸ் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் விஜயபாஸ்கர் ஜாலியாக சுற்றுகிறார். இன்னொரு விஜிலென்ஸ் ரெய்டையும் சந்திக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அதிமுக ெதாண்டர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி ஆகியோர் அதிமுகவில் இருந்து வெளியே வந்தால் ஐசியூவில் இருந்து அதிமுக வெளியே வந்துவிடும்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் 3 மாதம் கொரோனா கட்டுப்படுத்துவதில் போய்விட்டது. தற்போது எதிர்பார்க்காத நிலையில் மழை வந்துவிட்டது. வருங்காலத்தில் இதனை திமுக அரசு சரி செய்ய வேண்டும். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சரியான பாதையில் செல்கிறது. இந்த வழக்கில் முக்கியமான நபரான சயான், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும்போதே அவர் மீது குற்றம் சொன்னார். இந்த வழக்கில் தற்போது கைதாகியுள்ள ஜெயலலிதா கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் அப்ரூவர் ஆகப்போகிறார்கள். அப்போது எடப்பாடி பழனிசாமி கும்பல் உள்ளே செல்வார்கள்.

Related Stories:

More