குமரியில் 150 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின: மீட்பு பணி தீவிரம்

நாகர்கோவில்; தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் நேற்று முன் தினம் இரவு முதல் இடைவிடாது மழை ெபய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. தொடர் மழையால், காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பழையாற்றின் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரையோர கிராமங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

பல இடங்களில் குளங்கள், பாசன கால்வாய்கள் உடைப்பு ஏற்பட்டுள்ளன. நேற்று இரவில் இருந்து விடிய, விடிய மழை பெய்தது. இன்று காலையிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த கன மழை காரணமாக பழையாறு, தாமிரபரணி, பரளியாறு, வள்ளியாற்றில் தண்ணீர் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. தாமிரபரணி, பழையாறு வழியோர கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து, போக்குவரத்தும் அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தோவாளை ஒன்றிய கிராமங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

இறச்சக்குளம், பூதப்பாண்டி, நாவல்காடு, நங்காண்டி, அருமநல்லூர், தெரிசனங்கோப்பு, புரவசேரி, வீரவநல்லூர், ஈசாந்திமங்கலம், செண்பகராமன்புதூர், திருப்பதிசாரம் உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கி உள்ளது. மேற்கண்ட கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளை நிலங்கள் மூழ்கி உள்ளன. கும்ப பூ நடவு முடிந்த நிலையில், தொடர்ந்து வயல்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடப்பதால் பயிர்கள் அனைத்தும் அழுகும் நிலைக்கு வந்துள்ளன.

இதே போல் பூதப்பாண்டி அருகே உள்ள நாடான்குளம், செண்பகராமன்புதூர் கட்டளை குளமும் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அணைகளிலும் உபரிநீர் வெளியேற்றப்படுவதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் அதிகரித்து, கரையோர பகுதிகளில் உள்ள கிராமங்களை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது. சுமார் 150 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. தீயணைப்பு துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர்.

கனமழை காரணமாக குமரி மாவட்டத்துக்கு இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மனோதங்கராஜ் இன்று காலை வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மீட்பு பணிகளை விரைந்து செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர் மழை காரணமாக குமரி மாவட்டத்தில் பஸ், ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More