×

மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் : மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன்

சென்னை : மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கூறியுள்ளார்.அம்பத்தூர் தொழிற்பேட்டை, போரூர் மற்றும் தியாகராய நகர் உள்ளிட்ட மழையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், இன்று பார்வையிட்டார். குறிப்பாக அம்பத்தூர் பட்டரவாக்கம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழிற்பேட்டை பிரமுகர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார். பின்னர் போரூர் மற்றும் தியாகராய நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அமைச்சர் வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முருகன், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு நிச்சயம் வழங்கும் என்றார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வரைத் தொடர்பு கொண்டு, வெள்ள நிவாரணப் பணிகளுக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என அண்மையில் வாக்குறுதி அளித்திருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் முருகன், அந்த அடிப்படையில் தேவையான உதவிகளை மத்திய அரசு தற்போது செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

பல பத்தாண்டுகளாக மழைக்காலங்களில் சென்னையின் நிலை இதேபோன்றுதான் நீடித்து வருவதாக குறிப்பிட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன், அதற்கு தொலை நோக்குடன் கூடிய நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த தமிழக அரசு தயாராக வேண்டும் என்று வலியுறுத்தினார்.கடந்த 2015-ஆம் ஆண்டில் அவ்வளவு பெரிய வெள்ளம் ஏற்பட்ட போதிலும், தண்ணீர் அனைத்தும் வீணாகி கடலில் கலந்ததால் அடுத்த இரண்டு மாதத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். தற்போது பெய்த மழையில் கூட அதிகளவு தண்ணீர் வந்தும் அதைச் சேமித்து வைக்கவோ அல்லது பயன்படுத்தவோ நம்மிடம் எந்த திட்டமும் இல்லை என்பதுதான் நிதர்சனம் என அமைச்சர் கூறினார்.

எனவே மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளத்தைத் தடுக்கவும், அந்தத் தண்ணீரைப் முழுமையாகப் பயன்படுத்தவும் ஏதுவாக தமிழக அரசு தொலைநோக்குத் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர், பல இடங்களில் மழைநீர் வடிகால் தூர்வாரப்படாமல் உள்ளது என்றும், அந்தப் பணிகளையும் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 


Tags : Union government ,Tamil Nadu ,Minister ,Dr. ,L. Murugan , மழை
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...