×

ஒரு சிப்பம் நூலின் விலை ஆயிரம் உயர்வு: கைத்தறி, விசைத்தறி தொழிலாளர் நலன் காக்க ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் திருப்பூர், கரூர், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் ரூ.5 கோடி ஜவுளி உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், சுமார் 50 லட்சம் பேர் விசைத்தறி தொழிலையும், சுமார் 5 லட்சம் பேர் கைத்தறி தொழிலையும் நம்பி வாழ்கிறார்கள். இவர்கள் கொரோனாகாலத்தில் சிரமப்பட்டார்கள்.

ஜவுளி மற்றும் அதைச்சார்ந்த தொழில்களுக்கு நூல்தான் மூல ஆதாரம். கடந்தாண்டு டிசம்பரில் 250 ரூபாயாக இருந்த ஒரு கிலோ நூல் விலை, தற்போது கிலோ ரூ.350க்கு விற்கப்படுகிறது. இதை சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இப்போது மீண்டும் ஒரு சிப்பம் நூலின் விலை ரூ.1000 உயர்ந்துள்ளதால் உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் கவலையடைந்துள்ளனர். நூல் விலையை குறைக்க ஜவுளி தொழிலில் ஈடுபடுபவர்கள் கோரிக்கை வைத்தபோதும் இன்னும் விலை குறையவில்லை.

இதனால் ஒரு கோடி பேர் பாதிக்கப்படுவார்கள். ரூ.9 ஆயிரத்துக்கு விற்ற ஒரு சிப்பம் நூல், கடந்த 50 நாட்களில் படிப்படியாக உயர்ந்து 14 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது.  மத்திய, மாநில அரசுகள் நூல் விலை குறைய உடனடியாக நடவடிக்கை எடுத்து தொழிலாளர்கள் நலன் காக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.




Tags : G. Q. Wassan , GK Vasan demands protection of handloom and powerloom workers
× RELATED வெள்ள பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை