×

பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் கோவையில் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை : கனிமொழி , கமல் ஹாசன் கண்டனம்!!

கோவை : கோவை கோட்டைமேடு பெருமாள் கோயில் வீதியை சேர்ந்தவர் மகுடேஸ்வரன். சாலையோரம் தள்ளுவண்டியில் பலகாரம் விற்பனை செய்து வருகிறார். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பொன்தாரணி (17), ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அதே பள்ளியில், இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் மிதுன் சக்கரவர்த்தி என்பவர், இம்மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை, சக மாணவிகளிடம் கூறி, பொன்தாரணி கதறி அழுதுள்ளார். இந்த விவகாரம் வெளியே தெரியக்கூடாது என ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பொன்தாரணி பள்ளியில் இருந்து மாற்றுச்சான்றிதழ் பெற்று வெளியேறினார். பின்னர், அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் சேர்ந்தார். ஆனாலும், அந்த ஆசிரியர் செல்போன் மூலமாக தொடர்புகொண்டு மாணவியை மிரட்டியுள்ளார். வாட்ஸ்அப், மெசேஜ் என அடுத்தடுத்து டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான இந்த மாணவி, நேற்று முன்தினம் வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் இதுகுறித்து எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், ஆசிரியர் கொடுத்த, பாலியல் தொல்லைக் காரணமாகக் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பதறவைக்கிறது. தனக்கு நேர்ந்த தொடர் பாலியல் தொல்லை பற்றி பலமுறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவர்களின் குரலுக்குச் செவி கொடுத்திருந்தால், குற்றம் நிகழ்வதைத் தக்க நேரத்தில் தடுத்திருக்க முடியும் என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் மக்கள் நீதி  மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் , பாலியல் தொல்லையால் கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அவரது மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும். வேலியே பயிரை மேயும் அவலத்திற்குத் தமிழகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Gouam ,Mellow ,Kamal Hassan , கோவை
× RELATED மலையாள சினிமா முன்னோக்கி செல்ல என்ன காரணம்? கமல்ஹாசன் விளக்கம்