×

பிபா உலக கோப்பை பிரேசில் தகுதி

சாபோலா: பிபா உலக கோப்பை  கால்பந்து போட்டியில் விளையாட, தென் அமெரிக்காவில் இருந்து முதல் அணியாக பிரேசில் தகுதி பெற்றுள்ளது. கத்தாரில் பிபா உலக கோப்பை  கால்பந்து தொடர் அடுத்த ஆண்டு  நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க உள்ள 32 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் கண்டம் வாரியாக 2019 முதல் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இடையில் கொரோனா  பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டங்கள் தற்போது மீண்டும் நடக்கின்றன.

தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளில் பிரேசில், உருகுவே, அர்ஜென்டினா, சிலி, பெரு, வெனிசுலா, பராகுவே, ஈக்வடார், பொலிவியா, கொலம்பியா ஆகிய நாடுகள் தகுதிச்  சுற்றில் விளையாடி வருகின்றன. இதில் 11 ஆட்டங்களில் விளையாடி உள்ள  பிரேசில் 10 ஆட்டங்களில் வெற்றியும், ஒரு ஆட்டத்தில் டிராவும் கண்டு 31 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்தது. இந்நிலையில் நேற்று நடந்த தனது 12வது ஆட்டத்தில் கொலம்பியா அணியை பிரேசில் எதிர்கொண்டது. ஆட்டத்தின் 72 நிமிடத்தில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மர் தட்டித்தந்த பந்தை நடுகள வீரர் லூகாஸ் அழகாக கோலாக்கினார்.

அதன் பிறகு இரு அணிகளும் கோலடிக்கவில்லை. 1-0 என்ற கோல் கணக்கில் 11வது வெற்றியை பதிவு செய்த பிரேசில் 34 புள்ளிகளுடன் முதல் இடத்தை தொடர்வதுடன்  உலக கோப்பை வாய்ப்பையும்  உறுதி செய்தது. கத்தார் உலக கோப்பைக்கு தகுதி பெற்ற முதல் தென் அமெரிக்க அணி என்ற பெருமையும் அந்த அணிக்கு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல இதுவரை நடந்த 21 உலக கோப்பைகளிலும் விளையாடிய பிரேசில், இப்போது 22வது முறையாக கத்தார் உலக கோப்பையில் விளையாட உள்ளது.

அந்த அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளதுடன், தலா 2 முறை 2வது, 3வது, 4வது இடங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தென் அமெரிக்கா நாடுகளில் இருந்து குறைந்தபட்சமாக 4 அல்லது அதிகபட்சமாக 5 நாடுகள் உலக கோப்பையில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும். அதனடிப்படையில் பிரேசிலை தொடர்ந்து அர்ஜென்டினா, ஈக்வடார், சிலி, உருகுவே அணிகளும் தகுதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Brazil ,FIFA World Cup , Brazil qualifies for FIFA World Cup
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...