×

சட்டப்பேரவை தேர்தல்; 5 மாநிலங்களில் பாஜ ரூ 252 கோடி செலவு: மேற்கு வங்கத்துக்கு மட்டும் 60%

புதுடெல்லி: தமிழ்நாடு உள்பட சமீபத்தில் நடந்த 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் ரூ252 கோடியை பாஜ செலவு செய்துள்ளது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இதில் தமிழகத்தில் திமுக, கேரளாவில் இடது கம்யூனிஸ்ட், புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், அசாமில் பாஜ கட்சிகள் ஆட்சியை பிடித்தன. இந்த 5 மாநிலங்களின் தேர்தலுக்காக செலவிட்ட தொகை குறித்து தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் சமர்ப்பித்த செலவின அறிக்கை, தலைமைத் தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 5 மாநிலங்களின் தேர்தலுக்காக பாஜ மொத்தம் ரூ252 கோடியே 71 லட்சத்து 753 செலவிட்டுள்ளது. இதில், அசாமுக்கு ரூ43.81 கோடி, புதுச்சேரிக்கு ரூ4.79 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ151 கோடி செலவிடப்பட்டுள்ளது. பாஜ.வின் மொத்த தேர்தல் செலவில் 60 சதவீதம், மேற்கு வங்கத்தில் மட்டுமே செலவழிக்கப்பட்டு உள்ளது. இங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ரூ154.28 கோடி செலவழித்துள்ளது. இது, பாஜ.வை விட அதிகம்.  தமிழ்நாட்டை பொருத்தவரையில் பாஜ ரூ22.97 கோடி, கேரளாவில் ரூ29.24 கோடி செலவிட்டு இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் அக்கட்சி சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரியாதவர்களிடம் ரூ445 கோடி வசூல்
ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், `கடந்த 2019-20ம் நிதியாண்டில் மாநில கட்சிகள், அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து ரூ445.774 கோடி நன்கொடை வசூலித்துள்ளது. இது, இந்த கட்சிகளுக்கு கடந்த நிதியாண்டில் கிடைத்த மொத்த வருவாயில் 55.50 சதவீதமாகும். மேலும், இக்கட்சிகள் ரூ426.233 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலமாக வசூலித்துள்ளன. இதில், மிகவும் அதிகப்பட்சமாக தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ரூ.89.158 கோடி வசூலித்து முதலிடம் வகிக்கிறது. ஆந்திராவில் எதிர்க்கட்சியாக உள்ள சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் ரூ.81.69 கோடியும், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ.74.75 கோடியும் வசூலித்துள்ளன,’ என கூறப்பட்டுள்ளது.

Tags : BJP ,West Bengal , Legislative elections; BJP spends Rs 252 crore in 5 states: 60% for West Bengal alone
× RELATED மம்தா குறித்த சர்ச்சை பேச்சு பாஜ தலைவர் திலிப் கோஷ் மீது வழக்குப் பதிவு