பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர்வரத்து குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டமும் அதிகரித்து வருவதால் உபரி நீர் வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கத்தில் உள்ள நீரின் இருப்பு மற்றும் உபரி நீர் வெளியேற்றம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஆனந்தகுமார், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்த்குமார் கூறியதாவது: மழை வெள்ள தடுப்பு பணிக்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த 42 குழுக்கள் அமைக்கப்பட்டு களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்கள் விடாமல் பெய்த மழையால் நீர்தேக்கங்களுக்கு வரும் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதையடுத்து பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து உபரி நீர் திறந்ததால் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பூண்டி, ஓதப்பை ஆகிய இடங்களில் தரைப்பாலங்கள் மூழ்கியதை நேரில் சென்று பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில், கொசஸ்தலையாறு வடிநில கோட்டம் செயற்பொறியாளர் பொதுப்பணித்திலகம், உதவி செயற்பொறியாளர் ஜி.கார்த்திகேயன், வட்டாட்சியர் செந்தில்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: