×

வெள்ளம் சூழ்ந்த வீட்டில் இருந்து முதியவர் சடலத்தை அரை கிலோ மீட்டர் சுமந்து சென்று அடக்கம் செய்த போலீசார்: புளியந்தோப்பில் நெகிழ்ச்சி

பெரம்பூர்: புளியந்தோப்பு சாஸ்திரி நகரில் ஹாசன் (72) என்ற முதியவர் நேற்று  முன்தினம் உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது உடலை வில்லிவாக்கத்தில் உள்ள  இஸ்லாமியர்கள் மயானத்தில் அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர்.  இந்நிலையில் அந்த பகுதியில் அதிகளவில் மழைநீர் சூழ்ந்து இருந்ததால்  போலீசார் உதவியை நாடினர். அதன்பேரில், புளியந்தோப்பு போலீசார் மாலை 6  மணிக்கு படகில் அந்த வீட்டிற்கு சென்றனர். ஆனால், அந்த வீடு உள்ள பகுதி குறுகிய சந்து என்பதால், உள்ளே படகில் செல்ல  முடியவில்லை. இதனையடுத்து படகில் இருந்து கீழே இறங்கிய போலீசார், சுமார்  அரை கிலோ மீட்டர் தூரம் தண்ணீரில் நடந்தே சென்று, இறந்தவரின் உடலை துணியில்  கட்டி, தோளில் சுமந்தபடி படகிற்கு எடுத்து வந்தனர். அப்போது, மின்டை  காரணமாக அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

இதனால், மிகுந்த  சிரமப்பட்டு முதியவரின் உடலை அரை கிலோ மீட்டர் தூரம் சுமந்து சென்று, படகில் ஏற்றி பட்டாளம் சந்திப்பு வரை கொண்டு  வந்தனர். பின்னர், ஆம்புலன்ஸ் வரவழைத்து உடலை  வில்லிவாக்கம் இஸ்லாமியர் மயானத்திற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம்,  அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மற்றொரு சம்பவம்:  புளியந்தோப்பு சாஸ்திரி நகர் பகுதியில் தொடர் மழை காரணமாக வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இங்கு, பெண் ஒருவர் கடந்த 4 நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தவிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே படகு மூலம் புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சென்று, அந்த பெண்ணை மீட்டு படகில் ஏற்றினர். அப்போது, அவர் சுயநினைவின்றி காணப்பட்டார்.

உடன் வந்த உறவினர், அந்த பெண்ணின் கையை பிடித்து தேய்த்து, பேச்சு கொடுத்தபடி அங்குள்ள தனியார் மருத்துவமனை அழைத்து சென்றார். அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Tags : Puliyanthope , Flood, old man's body, buried police, Puliyanthoppu,
× RELATED ‘சென்னை புளியந்தோப்பில் தரமற்ற...