பிரதமர் பயிர் காப்பீட்டு தொகையில் விவசாயிகளின் பெயரை சேர்க்க காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னை: பிரதமர் பயிர் காப்பீட்டு தொகையில் விவசாயிகளின் பெயரை சேர்ப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் கூறியிருப்பதாவது:  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சம்பா (சிறப்பு) பருவம் முக்கிய நெல் விளையும் பருவமாகும். இதில் பொதுவாக சுமார் 10 லட்சம் விவசாயிகள் மற்றும் சுமார் 25 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு ஆகியவை அடக்கம்.  2021-2022 ம் ஆண்டில், இதுவரை 12 லட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது மற்றும் 8.75 லட்சம் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த 2020-2021ம் ஆண்டு காப்பீட்டுத் தொகையை விட ஒப்பீட்டளவில் குறைவாகும்.

 தொடர்ச்சியான திருவிழா விடுமுறை மற்றும் கடுமையான வடகிழக்கு பருவ மழை ஆகியவற்றின் காரணமாக  கடந்த செப்.15 முதல் தொடங்கிய சம்பா (சிறப்பு) பருவத்தில், அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள், பொது சேவை மையங்கள் மற்றும் சேவைகளை அணுக முடியாததால் விவசாயிகளின் சேர்க்கையை தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை.  மேலும், 3.36 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்களை குத்தகை அடிப்படையில் சாகுபடி செய்யும் சுமார் 3 லட்சம் விவசாயிகளுக்கு கடந்த சில நாட்களாக நிலங்களில் விவசாயம் செய்ததில் அவர்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து கணினிமயமாக்கப்பட்ட நில வருவாய் ஆவணம் (சிட்டா) வழங்கப்படுகிறது. அதன் காரணத்தாலும் விவசாயிகளின் சேர்க்கையை தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை.

  2021-2022 சிறப்புப் பருவத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் நெல் காப்பீட்டுத் தொகையை சேர்ப்பதற்கான கட்-ஆஃப் தேதி வருகிற 15ம் தேதி முடிவடைகிறது. பொது சேவை மையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறை, மாநிலம்  முழுவதும் இடைவிடாத மழை மற்றும் குத்தகை விவசாயிகள் கணினி மயமாக்கப்பட்ட  நில வருவாய் ஆவணம் (சிட்டா) பெறுவதில் சிரமம் ஆகியவற்றைக் கருத்தில்  கொண்டு, மேற்கூறிய 26 மாவட்டங்களில் நெல் காப்பீட்டுத் தொகைக்காக  விவசாயிகள் பெயரை சேர்ப்பதற்கான கட்-ஆஃப் தேதியை வருகிற 30ம் தேதி வரை  நீட்டிக்க வேண்டும்.

 இதன்காரணமாக நெல் விளையும் முக்கிய மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஈரோடு, கரூர், சேலம், ராமநாதபுரம், தேனி, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருப்பூர் மற்றும் சிவகங்கை ஆகிய 26 மாவட்ட விவசாயிகள் பயன் பெறுவர். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

சம்பா, தோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணம்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா மற்றும் தோட்டக்கலை பயிர்களின் சேத விவரங்கள் கணக்கிடப்பட்டு வருகிறது. அதன்பிறகு நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

Related Stories:

More