நரிக்குறவர்களுக்கு பட்டா வாங்கி தருவதாக ரூ8 லட்சம் மோசடி செய்த சாமியார் கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே அடுத்த காரந்தாங்கல் பகுதியில் சுமார் 40க்கும் அதிகமான நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  பட்டா வேண்டி பெரும்புதூர் தாலுகா அலுவலகத்தில் இப்பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை பட்டா வழங்கவில்லை. இந்நிலையில் அதே பகுதியில் கருப்பசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் மணி (55) என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் குறியும் சொல்லுவார் என்பதால் ஏராளமானோர் இவரிடம் குறி கேட்க வருவார்கள். இதனால் நரிக்குறவர்கள் இவருக்கு எல்லோரையும் தெரியும் என்று நினைத்து 40 குடும்பத்தினரும் ஒவ்வொருவரும் ரூ. 10 ஆயிரம், 20 ஆயிரம் போட்டு மணியிடம்,  

தங்களுக்கு பட்டா வாங்கி தர வேண்டும் என்று அனைவரும் சேர்ந்து கடந்த 2018ம் ஆண்டு ரூ .8 லட்சம் பணம் கொடுத்துள்ளனர். ஆனால் 3 ஆண்டுகள் மேலாகியும் பூசாரி மணி பட்டா வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.  இது குறித்து அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் மணி பூசாரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: