வெளுத்து வாங்கிய கனமழை; குமரியில் கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்: சாலைகள் துண்டிப்பால் போக்குவரத்து பாதிப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த கனமழையால் குளங்கள் நிரம்பி, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தென் கிழக்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக மழை நீடித்து வருகிறது. குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய பெய்த கன மழையால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

தண்ணீர் வரத்து அதிகம் காரணமாக குளங்கள், கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு, ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. நாகர்கோவில் அடுத்த இறச்சக்குளம் பெரியகுளம், நாவல்காடு நாடான்குளம் ஆகியவை நிரம்பி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நேற்று காலையில் நாகர்கோவில் பாலமோர் சாலையில் இடுப்பளவு தண்ணீர் பெருக்கெடுத்தது. சாலைகள், வயல்வெளிகள் வெள்ளத்தில் மூழ்கின. தாழக்குடி -  வீரநாராயணமங்கலம் சாலை, தெரிசனங்கோப்பு சாலைகள் முழுவதுமே வெள்ளத்தில் மூழ்கின. 

இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சுற்று வட்டார கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. தோவாளை பெரியகுளத்துக்கு அதிகஅளவு தண்ணீர் வந்ததால், முழு கொள்ளளவை எட்டியதால் ஷட்டர் முழுவதும் திறக்கப்பட்டது. இதனால் மறுகால் ஓடையில் வெள்ளம் அதிகமாக சென்றது. இதன் காரணமாக தோவாளை அண்ணாநகர், தேவர் நகர் பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. 

பல சாலைகள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டதால் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புற பகுதி வர முடியாமல் மக்கள் தவித்தனர். 

நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விசுவாசபுரம் பகுதியில் இடுப்பளவு தண்ணீர் சென்றது. இதனால் நாகர்கோவில் - திருநெல்வேலி பஸ் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பரளியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மலவிளை - மாத்தூர் சாலையை இணைக்கும் பாலம் தண்ணீரில் மூழ்கியது. மாத்தூர் தொட்டிப்பாலம் அடிபகுதி வழியாக செல்லும் சப்பாத்து பாலத்தையும் தண்ணீர் மூழ்கடித்தது. இந்த பகுதிகளில் உள்ள ஏராளமான கிராமங்கள் அடியோடு துண்டிக்கப்பட்டது. 

கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து ெகாட்டியது. குலசேகரத்தை அடுத்த வெண்டலியோடு பகுதியில் இருந்து அயக்கோடு - எள்ளுவிளை வழியாக மலவிளை செல்லும் இணைப்பு சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மலையோர பகுதிகளில் இருந்து தண்ணீர் வரத்து காரணமாக பேச்சிப்பாறை அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மதியம் 2900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. சிற்றார் 1 அணையில் இருந்து 1050 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி சுருளகோட்டில் அதிகபட்சமாக 15 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.

தரைப்பாலம் கடந்தபோது தாய் கண்ணெதிரே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 4 வயது சிறுவன்

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த கத்தாரிகுப்பம் பகுதியில் உள்ள காளியம்மன்பட்டியை சேர்ந்தவர் சுதாகர்(35). இவரது மனைவி பவித்ரா(28). இவர்களது மகன்கள் நித்திக்ரோஷன்(4), யுவன்ஆதித்யா(2). தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக அப்பகுதியில் உள்ள உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று காலை பவித்ரா வேலை நிமித்தமாக தனது 2 மகன்களை அழைத்துக்கொண்டு, ஒடுகத்தூர் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார். 

அப்போது, அங்குள்ள தரைப்பாலத்தை கடக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக நித்திக்ரோஷன் தரைபாலத்தில் தவறி விழுந்து, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டான். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பவித்ரா கூச்சலிட்டபடி கதறி அழுதார். தீயணைப்பு வீரர்கள் சிறுவனை உத்திரகாவிரி ஆற்றில் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மழைக்கு 3 பேர் பலி

தொடர் மழை காரணமாக சுவர் இடிந்தும், மரம் விழுந்தும் 3 பேர் பலியாகியுள்ளனர். 

இடிந்து விழுந்து சிறுவன் பலி:  சேலம் வீராணம் அருகே அல்லிக்குட்டை பகுதியில் தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பாலசபரி என்ற 5 வயது சிறுவன் உயிரிழந்தான். 5 பேர் காயம் காயம் அடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தோட்டாளத்தை சேர்ந்த விவசாயி உமாபதி(50) என்பவர், வீட்டின் சுவர் இடிந்து விழுந்தததில் பலியானார். நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓதனட்டி பகுதியை சேர்ந்தவர் மகேஷ்வரி (52). இவர், வண்டிச்சோலை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று  கொண்டிருந்தார். ஓதனட்டி பகுதியில் சென்றபோது அங்கு மழைக்கு வலுவிழந்த மரம் முறிந்து விழுந்ததில் மகேஷ்வரி உயிரிழந்தார். 

தண்டவாளத்தில் மண் சரிவு

நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையில் நேற்று முன் தினம் நள்ளிரவில் இரணியல் அருகே உள்ள தெங்கன்குழியில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், மங்களூர் செல்லும் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. மண்அகற்றப்பட்ட பிறகு ரயில்கள் இயக்கப்பட்டன. 

Related Stories:

More