பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை; கோவையில் பிளஸ் 2 மாணவி தற்கொலை: பரபரப்பு கடிதம் சிக்கியது

கோவை: கோவையில் பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை காரணமாக, பிளஸ் 2 மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியுள்ளது. கோவை கோட்டைமேடு பெருமாள் கோயில் வீதியை சேர்ந்தவர் மகுடேஸ்வரன். சாலையோரம் தள்ளுவண்டியில் பலகாரம் விற்பனை செய்து வருகிறார். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பொன்தாரணி (17), ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அதே பள்ளியில், இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் மிதுன் சக்கரவர்த்தி என்பவர், இம்மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

இதை, சக மாணவிகளிடம் கூறி, பொன்தாரணி கதறி அழுதுள்ளார். இந்த விவகாரம் வெளியே தெரியக்கூடாது என ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பொன்தாரணி பள்ளியில் இருந்து மாற்றுச்சான்றிதழ் பெற்று வெளியேறினார். பின்னர், அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் சேர்ந்தார். ஆனாலும், அந்த ஆசிரியர் செல்போன் மூலமாக தொடர்புகொண்டு மாணவியை மிரட்டியுள்ளார். வாட்ஸ்அப், மெசேஜ் என அடுத்தடுத்து டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான இந்த மாணவி, நேற்று முன்தினம் வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். 

மாணவியின் சடலத்தை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் உக்கடம் போலீசார் அங்கு விரைந்தனர். மாணவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறையில் சோதனை செய்தபோது, மாணவி எழுதிவைத்த கடிதம் சிக்கியது. அதில், ‘’ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, எலிசா சாருவோட அப்பா, ரீத்தாவோட தாத்தா உள்பட யாரையும் சும்மா விடக்கூடாது’’’ என தனது கைப்பட பேனாவால் எழுதியுள்ளார். கோவை அரசு மருத்துவமனையிலும் குவிந்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு மாணவியின் உடலை பெற மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். 

இதுதொடர்பாக கோவை மேற்கு மகளிர் காவல்நிலைய போலீசார், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மாணவியின் உறவினர்கள் கூறியதாவது: பொன்தாரணி, 6-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை ஆர்.எஸ்.புரம் பால் கம்பெனி ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்தார். அந்த பள்ளியில் பணிபுரியும் இயற்பியல் துறை ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி,  பொன்தாரணியிடம் செல்போனில்  பலமுறை தொடர்புகொண்டு டார்ச்சர் செய்துள்ளார். 

ஒருநாள் பள்ளிக்கு சீக்கிரமாக வரவழைத்து, கலையரங்கத்துக்கு அழைத்துச்சென்று, மேலாடையை கழற்றி, மானபங்கப்படுத்தியுள்ளார். பள்ளி முதல்வரிடம் புகார் செய்தபோது அவர்கள் ஆசிரியரை கண்டிப்பதற்கு பதில் மாணவியை கண்டித்தார். 11ம் வகுப்பு இறுதி தேர்வு முடிந்ததும், பொன்தாரணி, பள்ளியில் இருந்து மாற்றுச்சான்றிதழ் வாங்கி வந்துவிட்டார். பின்னர், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 12-ம் வகுப்பில் சேர்ந்து படித்தார். இங்கு, சேர்ந்த இரண்டு மாதங்களில் அந்த ஆசிரியர் மீண்டும் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். 

இதில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத்தான் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மாணவியின் பெற்றோர் கூறுகையில்,  ‘’எங்கள் பிள்ளைக்கு ஏற்பட்ட நிலைமை வேறு பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடாது.  ஆசிரியர் என்ற போர்வையில் திரியும் அந்த காமக்கொடூரனை சும்மா விடக்கூடாது’’  எனக்கூறினர். 

கடும் நடவடிக்கை கோரி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம் 

மாணவி தற்கொலைக்கு, உரிய நீதி கிடைக்கவேண்டும் என வலியுறுத்தி, மாதர் சங்கத்தினர் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘’பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்டு, மாணவி உயிரை பறித்த அந்த ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இதுதொடர்பாக, விசாரணை கமிட்டி அமைத்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு உரிய நிவாரண நிதி வழங்கவேண்டும்’’ என்றனர்

ஆசிரியர் சிக்கினார் 

ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை மகளிர் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான ஆசிரியர் காதல் திருமணம் செய்து கொண்டவர் என கூறப்படுகிறது. இவரின் மனைவி அதே பள்ளியில் ஆங்கிலப்பாட ஆசிரியை. இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. மாணவி, கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மேலும் 2 பேர் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: