×

சென்னையில் மழையால் வீட்டை விட்டு வெளியே வர இயலாத பொதுமக்களுக்கு உணவு வழங்க 200 அலுவலர்கள் நியமனம்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி

சென்னை: சென்னையில் மழை பாதிப்பால் வெளியில் வர இயலாத பொது மக்களுக்கு உணவு வழங்க 200 அலுவலர்கள் நியமனமனம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார். சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேற்று அளித்த பேட்டி: தேசிய பேரிடர் மீட்பு படையின் 7 குழுக்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள மூன்று குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் தலா இரண்டு குழுக்கள் தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 259 முகாம்களில், 14,135 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி பகுதியில் 2,699 நபர்கள் 44 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 28,64,400 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் தொடர் மழை காரணமாக வெளியில் வர இயலாத நிலையில் உள்ள பொது மக்களுக்கு உணவு வழங்குவதை உறுதி செய்ய வார்டுக்கு ஒருவர் வீதம் 200 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவருடன் இணைந்து இந்த பணிகளைக் கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் உதவி வருவாய் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், 3215 நபர்கள் 80 நிவாரண முகாம்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1546 நபர்கள் 40 நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், சென்னை, சிவகங்கை, நீலகிரி, மாவட்டத்தில் 3 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 64 கால்நடை இறப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில், மொத்தம் 534 குடிசைகளும், 133 வீடுகளும் சேதமடைந்துள்ளன. சென்னையில் மழை நீர் தேங்கியுள்ள 530 பகுதிகளுள், 119 பகுதிகளில் ராட்சத பம்புகள் மூலம் அகற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 411 பகுதிகளில் அகற்றப்பட்டு வருகிறது. மழை நீரால் சூழப்பட்டுள்ள 22 சுரங்கப்பாதைகளில், 15 சுரங்கப்பாதைகளில் மழை நீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 7 சுரங்கப்பாதைகளில் மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

சாலைகளில் விழுந்த 529 மரங்களில், 521 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது.  இதுவரை 2007 மருத்துவ முகாம்கள் மூலம் 79,043 நபர்கள் பயனடைந்துள்ளனர். மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்க 55 படகுகளும், மழை நீரை வெளியேற்ற 46 ஜேசிபிகளும் 539 ராட்சத பம்புகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 15,225 புகார்கள் வரப்பெற்று, 5,639 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய புகார்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் TNSMART இணையதளத்திலும், வாட்ஸ் அப் எண் 9445869848 மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

பொதுமக்கள் TNSMART இணையதளத்திலும், வாட்ஸ்அப் எண் 9445869848 மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம்.


Tags : Chennai ,Minister ,KKSSR Ramachandran , Chennai, Rain, Public, Food, Officers, Minister KKSSR Ramachandran
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...