×

அதிகபட்சமாக கொட்டிய மழை தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை மீட்பு பணியில் 30 ஆயிரம் ஊழியர்கள்

சென்னை: சென்னையில் பெய்த மழையால் தேங்கி நிற்கும் வெள்ள நீரை அகற்றும் பணியில் 30 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த 6ம்தேதி இரவு விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. இந்த கனமழையால் சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்தடுத்த நாட்களில் பெய்த பலத்த மழையால், ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழைநீரின் அளவு மேலும் அதிகரித்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை நகர் பகுதிகளை பொறுத்தவரை 500க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது. தற்போது மாநகராட்சி ஊழியர்களின் போர்க்கால நடவடிக்கையாக ராட்சத மோட்டார்களை பயன்படுத்தி மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

 ஆனாலும், அதிக அளவு பெய்த கனமழையால், மேற்கு மாம்பலம், லேக் வியூ சாலை, மயிலாப்பூர் சீத்தம்மாள் காலனி, வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி, அசோக்நகர் 16, 17வது அவென்யூ, சிந்தாதிரிபேட்டை, வடபழனி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, பாடி, கொளத்தூர், அடையாறு, அண்ணா நகர், கோடம்பாக்கம், வியாசர்பாடி, புளியந்தோப்பு, தண்டையார்பேட்டை, கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், தி.நகர், வேப்பேரி, கிண்டி, திரு.வி.க.நகர், ஆலந்தூர், சோழிங்கநல்லூர், பெருங்குடி, தரமணி, வளசரவாக்கம், புழல், மணலி, திருவொற்றியூர் என சென்னை மாநகரப் பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதடைந்து நாசமானது. இதனால் அதை சரி செய்யக்கூட முடியாமல் பலர் தவித்து வருகின்றனர். ஓட்டேரி சாலையில் கால்வாய் நிறைந்து மழைநீர் சாலையில் வெள்ளம் போல் சென்றது. தற்போது தான் அங்கு படிப்படியாக தேங்கிய நீர் வெளியேறி வருகிறது. வெள்ள நீர் இன்னும் வடியாததால் அப்பதியில் வசித்து வந்த மக்கள் பலர் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

 வீடுகளின் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பல நீரில் மூழ்கியுள்ளன. மேலும் கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்துள்ளது. அவற்றை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பகுதிகளில் தரைத்தளங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 3000க்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. சுரங்கப்பாதைகளை பொறுத்தவரை இன்னும் மழைநீர் முழுவதுமாக தேங்கியுள்ளது. இதனால் அவை அனைத்தும் பொதுமக்கள் யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு மூடி வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் வெயில் அடிக்க தொடங்கியுள்ளதால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். ஆனாலும் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் இன்னும் வெளியில் வர முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

 சென்னை நகரப் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் வகையில் 412 மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றின் மூலம் வேகமாக மழைநீரை வெளியேற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. அதிகமாக தண்ணீர் தேங்கியுள்ள 48 பகுதிகளில் இருந்து படகு மூலம் மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மணலி, திரு.வி.க.நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, கொரட்டூர், கொளத்தூர் ஜி.கே.எம். காலனி, பூம்புகார் நகர், பெரவள்ளூர், புளியந்தோப்பு, மேற்கு மாம்பலம் ஆகிய மண்டலங்களில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் 15 மண்டலங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

 தொடர்ந்து ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு சென்னை மாநகராட்சி ஊழியர்கள் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மூலம் மீட்பு பணிகளை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்த மழையால் மீட்புப்பணி பாதிக்கப்பட்டது. ஆனாலும் இரவு-பகலாக மாநகராட்சி ஊழியர்கள் அடைப்புகளை சரி செய்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.சென்னையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையினால் 289 இடங்களில் சாலைகளில் மரங்கள் சாய்ந்தன. அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக அகற்றியதை தொடர்ந்து, போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. மேலும் 8 இடங்களில் சாலைகளில் கிடந்த மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டு போக்குவரத்துக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் ஓரமாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை முழுவதுமாக அகற்றும் பணி நடந்து வருகிறது.

அதேபோன்று சென்னையில் 523 தெருக்கள், சாலைகளில் மழைநீர் தேங்கியது. அதில் 280க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் உடனே அகற்றப்பட்டு விட்டது. மேலும் நேற்று முன்தினம் இரவு சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரும் இரவோடு இரவாக அகற்றப்பட்டது. மீதமுள்ள சாலைகள், தெருக்களில் உள்ள மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதில் 539 ராட்சத பம்புகள் மூலம் தொடர்ந்து மழைநீர் வெளியேற்றப்படுகிறது. கூடுதலாக 24 பம்புகள் வெளியில் இருந்து வரவழைக்கப்பட்டு மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த சுரங்கப்பாதைகளில் வெள்ளம்
சென்னையில் நேற்று காலை முதல் வெயில் அடிப்பதால் மற்ற தெருக்களில் ேதங்கியுள்ள மழைநீர் வேகமாக வடிந்து வருகிறது.  முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நேற்று முன்தினம் ஒரேநாளில் 10.9 லட்சம் பேருக்கு உணவுகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திருவொற்றியூர் மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, ராயபுரம் எம்.சி. சாலை சுரங்கப்பாதை, ஸ்டான்லி நகர் சுரங்கப்பாதை, ஆர்பிஐ சுரங்கப்பாதை மற்றும் எழும்பூர் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, பெரம்பூர் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை மற்றும் கணேசபுரம் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை மற்றும் ஹாரிங்டன் சுரங்கப்பாதை, நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, ஜோன்ஸ் சாலை சுரங்கப்பாதை மற்றும் பஜார் சாலை சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை ஆகிய 16 சுரங்கப்பாதைகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் அதிக அளவில் தேங்கியது.  அதில் 10 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள சுரங்கப்பாதைகளிலும் மழைநீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் விரைந்து வெளியேற்றப்பட்டு போக்குவரத்து கூடிய விரைவில் சீர்செய்யப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

Tags : Chennai , Pouring rain, water, Chennai, staff
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...