ஊரக தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலை வீடியோ பதிவு செய்ய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. பின் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது. பல பகுதிகளில் பல்வேறு காரணங்களால் மறைமுகத் தேர்தல் நடத்தப்படவில்லை. மரக்காணம் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் பங்கேற்கும் வார்டு உறுப்பினர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரியும், தேர்தல் நடைமுறைகளை வீடியோ பதிவு செய்ய உத்தரவிடக் கோரியும் வார்டு உறுப்பினர் கண்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 இதேபோல மாமநத்தம் கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் தேர்தல் நடத்த கோரியும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மரக்காணம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு நவம்பர் 22ம் தேதியும், மாமநத்தம் கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் பதவிக்கு நவம்பர் 24ம் தேதியும் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் பி.முத்துகுமார், ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக தொடர்ந்த வழக்கில் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்து. அந்த உத்தரவின்படி வீடியோ பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

மறைமுக தேர்தல் நடத்தப்படாத பகுதிகளுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படுமென்று தேர்தல் ஆணையத்திடம் கருத்துகளை பெற்று தெரிவிப்பதாக மாநில தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தகுதியான தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், மறைமுக தேர்தலில் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். மறைமுக தேர்தல், தேர்தல் நடைபெறும் வளாகங்களிலும் நடக்கும் நடவடிக்கைகள் முழுவதையும் வீடியோ பதிவு செய்து 60 நாட்களுக்கு பாதுகாக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இரு வழக்குகளையும் முடித்து வைத்தனர்.

Related Stories:

More