தடுப்பூசி போடாதவர்களுக்கு பெட்ரோல், காஸ், ரேஷன் ‘நோ’.! அவுரங்காபாத் கலெக்டர் அதிரடி

அவுரங்காபாத்: தடுப்பூசி போடாதவர்களுக்கு பெட்ரோல், காஸ், ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என்து அவுரங்காபாத் கலெக்டர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 110 கோடி டோஸ் வரை போட்டுள்ள நிலையில், இன்னும் பலர் முதல் டோஸ் தடுப்பூசி கூட போடாமல் உள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக கலெக்டர் சுனில் சவான் வெளியிட்ட அறிக்கையில், ‘நாடு முழுவதும் மக்களுக்கு போடப்பட்டு வரும் இரண்டு வித தடுப்பூசிகளில், ஏதேனும் ஒரு தடுப்பூசியாவது போட்டிருக்க வேண்டும். குறிப்பாக ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட்டிருக்க வேண்டும்.

இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசி கூட போட்டுக் கொள்ளாதவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படாது. பெட்ரோல், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படாது. எதிர்பார்த்தபடி அவுரங்காபாத் மாவட்டத்தில் முழுமையாக தடுப்பூசி போடப்படாததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய உத்தரவின்படி கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை காட்டியவர்களுக்கு மட்டுமே ரேஷன் உணவு வழங்கப்படும். இது தொடர்பாக எரிவாயு காஸ் ஏஜென்சிகள் மற்றும் பெட்ரோல் பங்குகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் கடைக்காரர்களுக்கு எதிராக பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அவுரங்காபாத்தில் இதுவரை 71 சதவீதத்தினர் மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். 24 சதவீதம் பேர் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: