×

தஞ்சை பெரிய கோயிலில் நாளை ராஜராஜசோழனின் 1036வது சதய விழா

தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036ம் ஆண்டு சதயவிழா நாளை  நடைபெறுகிறது. உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று தஞ்சை பெரிய கோயிலில் 2 நாட்கள் சதய விழா என்ற பெயரில் சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக, விழா பக்தர்களின்றி நடந்தது. எனினும் பெருவுடையாருக்கு அபிஷேகம் மற்றும் பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு மட்டும் நடைபெற்றது. இந்த ஆண்டும் தொற்று முன்னெச்சரிக்கை காரணமாக, 1036ம் ஆண்டு சதய விழா நாளை(13ம் தேதி) ஒரு நாள் மட்டும் நடைபெறுகிறது. இதற்காக கடந்த 8ம் தேதி பந்தல் கால் நடப்பட்டது.


விழாவையொட்டி நாளை காலை 7 மணிக்கு பெரிய கோயிலுக்கு வெளியே உள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. பிறகு கோயில் குருக்கள் மற்றும் ஊழியர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்படுகின்றன. காலை 9 மணிக்கு தருமபுரம் ஆதீனம் உபயத்தில் பெருவுடையாருக்கு 36 வகை பொருட்களால் அபிஷேகம் சுமார் நான்கு மணி நேரம் நடைபெறும். மதியம் 1 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகள், மாமன்னர் ராஜராஜ சோழன் சிலையுடன் கோயில் பிரகாரத்திற்குள் உலா நடைபெறும். விழாவையொட்டி தஞ்சையில் நாளை  கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Rajajasolan ,Great ,Thanjai , The 1036th Satya Festival of Rajaraja Chola will be held tomorrow at the Tanjore Big Temple
× RELATED ஆர்எஸ்எஸ், சங் பரிவாரால்...