×

வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 113 வீடுகள் சேதம்-மாலையில் வெளுத்து வாங்கிய மழை

வேலூர் :  வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 113 வீடுகள் சேதமடைந்துள்ளது. நேற்று மாலை தொடங்கிய மழை மாவட்டத்தின் பல பகுதிகளில் வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை பெய்வதால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்ததால் பாலாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வருகின்றன.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக லேசான சாரல் மழை பெய்தது. நேற்று அதிகாலை முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழையால் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார். மழையின் காரணமாக சாலையில் மக்கள் நடமாட்டம் குறைந்த அளவில் காணப்பட்டது. காலை முதல் விட்டு, விட்டு பெய்த மழை, மாலை  3.30 மணியளவில் பலத்த மழை பெய்த தொடங்கி, இரவு நேரத்தில் மழை வெளுத்து வாங்கியது.

வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக கடந்த 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 113 வீடுகள் இடிந்து சேதடைந்துள்ளன. மாவட்டத்தில் அணைக்கட்டு, காட்பாடி, கே.வி.குப்பம், பேரணாம்பட்டு, குடியாத்தம் பகுதிகளில் 55.55 ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி மாவட்டத்தில் 3 பேர் இறந்துள்ளனர். மேலும் 27 கால்நடைகள் இறந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ளத்தில் சிக்கியவர்களை முகாம்களில் தங்க வைப்பதற்காக 27 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. தற்போது 2 முகாம்களில் 12 குழந்தைகள் உட்பட 44 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

சதுப்பேரி, செதுவாலை, ஊனைவாணியம்பாடி பகுதிகளில் உள்ள ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் வெள்ளம் பாலாற்றில் திருப்பி விடப்படுகிறது. தற்போது பாலாற்றில் 4,200 கனஅடி தண்ணீர் செல்கிறது. பொன்னை ஆற்றில் 1,500 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. பாலாறு, பொன்னை ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அணைக்கட்டு: அணைக்கட்டு தாலுகாவுக்குட்பட்ட ஊசூர் அடுத்த அத்தியூரில் இருந்து சிவநாதபுரம் வழியாக கால்வாய் மூலம் தெள்ளூர் ஏரிக்கு மழைநீர் சென்றது. ஆனால் ஏரிக்கால்வாய்கள் தூர்ந்து மண், முட் செடிகள், கொடிகள் முளைத்து ஆக்கிரமித்து இருந்ததால், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் மழைநீர் ஏரிக்கு செல்லாத நிலை இருந்தது. இதையடுத்து, நேற்று ஊராட்சி மன்ற தலைவர் தேவிசுரேஷ், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மூர்த்தி, ஜானகி உள்ளிட்டோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், நேற்று காலை சிவநாதபுரம் முதல் தெள்ளூர் ஏரிக்கு செல்லும் கால்வாய்களில் உள்ள மண், முட்செடிகளை ஜேசிபி மூலம் அகற்றி ஏரிக்கால்வாயை சீரமைத்தனர்.

குடியாத்தம்: குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் ஏரியில் மழைநீர் ஏரிக்கு செல்வதாலும், ஏரி உள்ள   பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதாலும், ஏரியின் கரை அருகே உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் ஏரியின் தென்கிழக்குப் பகுதி கரையில் சுமார் 15  மீட்டர் நீளம் மண்சரிவு ஏற்பட்ளது. இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் தனஞ்ஜெயன், தாசில்தார் லலிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி,  யுவராஜ், ஒன்றியக்குழு துணைத்தலைவர் அருள் முரளி,

ஆகியோர் நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, நேற்று குடியாத்தம்பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் குணசீலன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் குடியாத்தம் தாலுகா போலீசார் ஜேசிபி இயந்திரம் மூலம் மண் கொட்டி கரையை பலப்படுத்தினர்ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் மலையை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில், பொதுமக்கள் வசதிக்காக நடுநிலைப்பள்ளி கட்டப்பட்டது. இப்பள்ளியில் சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், தொடர் மழையால் மலையில் இருந்து வரும் மழைநீர் பள்ளி வளாகத்தில் தேங்கியது.

இதனை ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார் தலைமையில் நேற்று ஜேசிபி மூலம் தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, பள்ளி வளாகத்தில் இருந்து சுற்று சுவர் அருகே பள்ளம் தோண்டப்பட்டு மழைநீர் வெளியேற்றப்பட்டது.

அம்முண்டியில் அதிகபட்ச மழை பதிவு

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்முண்டி சர்க்கரை ஆலையில் 21.62 மி.மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): குடியாத்தம் 19.20, காட்பாடி 16.80, மேல் ஆலத்தூர் 17.40, பொன்னை 17.10, வேலூர் 20.20, அம்முண்டி சர்க்கரை ஆலை 21.62. மாவட்டத்தில் பதிவான மொத்த மழையளவு 112.32. சராசரி 18.72 மி.மீ. மழை பதிவானது.

Tags : Vellore district , Vellore: 113 houses have been damaged due to continuous rains in Vellore district. In many parts of the district the rain started yesterday evening
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...