17 நாட்களில் 609 மி.மீ மழை பதிவு புதுவையில் 24 குடிசை, 6 வீடுகள் சேதம்-ஆட்சியர் பூர்வா கார்க் தகவல்

புதுச்சேரி : புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த அக்டோபர் 26ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து, புதுச்சேரி பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த 26ம் தேதி முதல் புதுச்சேரி மண்டலத்தில் மொத்தம் 609 மி.மீ. மழை பெய்துள்ளது.  நேற்று முன்தினம் புதுச்சேரியில் 52.4 மி.மீ., திருக்கனூரில் 40 மி.மீ., பத்துக்கண்ணில் 46 மி.மீ., பாகூரில் 41 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் உள்ள முக்கிய ஏரிகள் கிட்டத்தட்ட முழு கொள்ளளவிற்கு நிரம்பியுள்ளன. அதில் பாகூர் ஏரி 2.78 மீட்டர் அளவும், ஊசுட்டேரி 3.37 மீட்டர் அளவும் எட்டியுள்ளது.

 வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு புகார்கள் மற்றும் குறைகளை பொதுமக்கள் தெரிவிப்பதற்காக மாநில அவசரகால செயல்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மொத்தம் 25 புகார்கள் பெறப்பட்டு, அனைத்து புகார்களும் சம்பந்தப்பட்ட துறையினரால் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

 நேற்று முன்தினம் மட்டும் செல்லம்பாப்பு நகர், ரெயின்போ நகர், சோலை நகர், டி.வி.நகர், கொசப்பாளையம், பெருமாள்புரம், வில்லியனூர், உத்திரவாகினிப்பேட்டை, கொம்பாக்கம், ஆச்சாரியாபுரம், கல்மண்டபம், ஆரியபாளையம், பத்துக்கண்ணு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதை அடுத்து தண்ணீரை வெளியேற்றும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. கனமழை காரணமாக ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் உதவுவதற்காக அரக்கோணத்தில் இருந்து வந்துள்ள  தேசிய பேரிடர் மீட்பு குழுவின் ஒரு குழு புதுச்சேரியில் நிறுத்தப்பட்டுள்ளது.

24 குடிசைகள் மற்றும் 6 வீடுகள் கனமழையால் சேதமடைந்துள்ளன. 2 நபர்கள் காயம் அடைந்துள்ளனர். இருப்பினும், பொதுமக்கள் யாருக்கும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.  மேலும், கனமழையால் 38 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இதுவரை 195 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு தற்போது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை 23,645 உணவு பொட்டலங்கன் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: