×

அன்னவாசல் அருகே மயானத்திற்கு செல்ல பாதை வசதி இல்லாததால் கழுத்தளவு நீரில் சடலத்தை சுமந்து சென்று அடக்கம் செய்த உறவினர்கள்

விராலிமலை : அன்னவாசல் அருகே மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால் கழுத்தளவு கண்மாய் நீரை கடந்து மிகுந்த சிரமங்களுக்கிடையே சடலங்களை தோளில் சுமந்து கொண்டு அடக்கம் செய்யும் துயரம் கடந்த 50 ஆண்டுகளாக மேலாக தொடரும் நிலையில் தங்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என ஊர் பொதுமக்கள் வேதனையோடு கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மேலப்பழுவஞ்சி மற்றும் கீழப்பழுவஞ்சி ஆகிய கிராமங்களில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் உயிரிழந்தால் ஈமச்சடங்கு செய்வதற்கு அந்த ஊரில் இருந்து சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயானத்திற்கு சுமந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் மயானத்திற்கு செல்வதற்கு சரியான பாதை இல்லாததால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கருவேல காடுகள் மற்றும் கண்மாய் நீரை கடந்து மிகுந்த சிரமங்களுக்கிடையே சடலங்களை சுமந்து சென்று அப்பகுதி மக்கள் அடக்கம் செய்து வருவதாக கூறப்படுகிறதுஇந்நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த சிங்காரம்(69) என்பவர் உடல் நலக்குறைவால் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.

இந்த நிலையில் மயானத்திற்கு செல்ல சாலை இல்லாததால் நேற்று அவரது சடலத்தை தோளில் சுமந்தபடி மழையால் நீர் நிறைந்திருக்கும் கண்மாயில் கழுத்தளவு நீரில் நடந்து சென்று இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர். பல ஆண்டுகளாக தொடரும் இந்த துயரத்திற்கு அரசும், அரசு அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வேதனையோடு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Annavasal , Viralimalai: There is no way to go to the cemetery near Annavasal.
× RELATED அன்னவாசல் அருகே தைல மரக்காட்டில் திடீர் தீ