திருத்துறைப்பூண்டி நரிக்குறவர் காலனியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை டெல்லி சிறப்பு பிரதிநிதி ஆய்வு-மக்களிடம் குறைகள் கேட்டார்

திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் பின்புறம் மழையால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் காலனியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரநிதி ஏ.கே.எஸ்.விஜயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்துநிலையம் பின்புறம் வீரன் நகரில் நரிக்குறவர் சமுதாய மக்கள் வசிக்கும் காலனியில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அங்கு வசித்து வரும் 200 நபர்களுக்கு நகராட்சி மற்றும் நகர திமுக சார்பில் உணவு வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.

பின்னர் ஏகேஎஸ் விஜயன் கூறியதாவது: இந்த பகுதியில் தொடர்மழையால் மழைநீர் தேங்கி இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களுக்கு தமிழக அரசு சார்பில் தொகுப்பு வீடு கட்டி தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும். அதேபோல் தமிழக அரசில் இருந்து நரிக்குறவர் இன மக்களுக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் தமிழக அரசு செய்து தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்.

பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா மற்றும் சாதிச்சான்று வழங்குவதற்கும் வங்கி கடனுதவி பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். மின் இணைப்பு இல்லாத 15 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதில் நகராட்சி முன்னாள் தலைவர் பாண்டியன், ஆணையர் சந்திரசேகரன், நகர அமைப்பு ஆய்வாளர் அருள்முருகன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சிக்கந்தர், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், நகர துணைச் செயலாளர் ஓம்சக்தி கண்ணன், நகர விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பாலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: