×

நாகை மாவட்டத்தில் 7,127 எக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது-கூடுதல் தலைமை செயலர் அதுல்ய மிஸ்ரா தகவல்

நாகை : நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கருங்கண்ணி, காமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் மழைநீரில் மூழ்கியுள்ள பயிர்கள், வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் உள்ள புயல் பாதுகாப்பு மையம் மற்றும் அங்கு நடந்த கொரோனா தடுப்பூசி முகாம், வானவன் மகாதேவி ஊராட்சியில் சமுதாய கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரிடர் எச்சரிக்கை கருவி மற்றும் அங்கு நடந்த மருத்துவ முகாம், பழங்கள்ளிமேடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும், அவர்களுக்கு வழங்கப்படும் உணவினையும் கூடுதல் தலைமைச் செயலர் அதுல்யமிஸ்ரா பரர்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதை தொடர்ந்து நாகை துறைமுகத்தை வளர்ச்சிப் படுத்துவது குறித்தும், நாகையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கியுள்ள மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரையும் பார்வையிட்டார். கலெக்டர் அருண்தம்புராஜ், வடகிழக்கு பருவமழை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர். இதை தொடர்ந்து கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யமிஸ்ரா கூறியதாவது:

கடந்த சில தினங்களாக பெய்த கனமழை தற்பொழுது குறைந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் எடுத்து முன்எச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்புகள் அதிகம் இல்லை. தாழ்வான பகுதிகளில் வசிக்கின்ற மக்களை பாதுகாப்பாக பள்ளிகள், சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. ஒருசில இடங்களில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் நாகை மாவட்டத்தில் 56 ஆயிரம் எக்டேர் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 50 ஆயிரம் பேர் இதுவரை பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர்.

பயிர் காப்பீட்டு தொகைக்கு பதிவு செய்ய வரும் 15ம் தேதி கடைசி. கடந்த இரண்டு நாட்கள் பெய்த மழையில் சுமார் 7 ஆயிரத்து 127 எக்டேர் பயிர் நீரில் மூழ்கியுள்ளது. தற்பொழுது மழை குறைந்ள்ளதால் பயிர் நிலங்களில் உள்ள நீர் வடிந்த பிறகு கணக்கெடுப்பு செய்யப்படும் என்றார். இதை தொடர்ந்து நாகை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் கூடுதல் தலைமை செயலர்அதுல்யமிஸ்ரா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பாஸ்கரன், கலெக்டர் அருண்தம்புராஜ், எஸ்பி .ஜவஹர், டிஆர்ஓ ஷகிலா, திட்ட இயக்குநர் பெரியசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Nagai district ,Chief Secretary ,Adulya Misra , Nagai: Crops submerged in rainwater in Karungkanni and Kameswaram areas near Velankanni in Nagai district, Vedaranyam
× RELATED குஜராத் மாஜி தலைமை செயலாளருக்கு லோக்பால் உறுப்பினர் பதவி