×

முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சி அளிக்கும் கடைமடை காவிரிப்பாசன ஏரிகள்-24 மணி நேரமும் கரைகளை கண்காணிக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்

அறந்தாங்கி : பல ஆண்டுகளுக்கு பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தின் காவிரி கடைமடைப்பகுதி ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி வட்டங்களில் ஒரு சில பகுதி கல்லணைக் கால்வாய் மூலம் காவிரி நீர்ப்பாசனம் நடைபெற்று வருகிறது. இதில் கடைமடைப்பகுதியான நாகுடி பகுதியில் 110 ஏரிகள் மூலம் காவிரிப்பாசனம் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் காவிரி நீர் இப்பகுதிக்கு வந்தாலும், பெரும்பாலும் அனைத்து ஏரிகளும் நவம்பர் மாதத்தில் முழு கொள்ளளவு இருப்பதில்லை.

மழை பொழிவு, காவிரி நீர் வரத்து இருந்தாலும், பாசனத்திற்கு ஏரிகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் அதிகபட்சமாக ஏரிகளில் 80 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் இருப்பு இருப்பதில்லை.
ஆனால் இந்த ஆண்டு நாகுடி கடைமடை பகுதிக்கு தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை உத்தரவின்பேரில், நீர்வளத்துறை, கல்லணைக் கால்வாய் கோட்ட அதிகாரிகள் நடவடிக்கையின்பேரில், போதுமான தண்ணீர் வரத்து இருந்ததாலும், வந்த தண்ணீரை அதிகாரிகள் முறையாக அனைத்து ஏரிகளுக்கும் பகிர்ந்து வழங்கியதாலும், பெரும்பாலான ஏரிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக தண்ணீர் இருப்பு இருந்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக இப்பகுதியில் உள்ள ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மேலும் அந்த ஏரிகளில் இருந்து உபரி நீர் உபரி நீர் போக்கி வழியாக தடையின்றி வெளியேறி வருகிறது.

நீர்வளத்துறை, கல்லணைக் கால்வாய் கோட்ட நாகுடி பிரிவு அலுவலக பராமரிப்பில் உள்ள 110 ஏரிகளின் கரைகள் தொடர்மழையின் காரணமாகவும், கால்நடைகள் மற்றும் மனிதர்கள் நடந்து சென்றதாலும் சேதமடைந்து விடாமல் இருக்க நாகுடி உதவிப் பொறியாளர் செந்தில்குமார் தலைமையில், பாசன உதவியாளர்கள் 24 மணிநேரமும், ஏரிகளின் கரைகள், ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள், ஏரிகளின் உபரி நீர் போக்கிகள் உள்ளிட்டவற்றை கண்காணித்து வருகின்றனர்.

Tags : Public Works Department ,Cauvery Irrigation Lakes , Aranthangi: After many years, the farmers are happy that the Cauvery lakes in the Pudukkottai district have reached full capacity.
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...