அதிமுக ஆட்சியில் தைல மரக்கன்றுகள் நடுவதற்காக வரத்து வாரிகளை அழித்ததால் நீர்நிலைகள் நிரம்பவில்லை-திருமயம் பகுதி மக்கள் குற்றச்சாட்டு

திருமயம் : நீர்வரத்து வாரிகளை அழித்து அதிகாரிகள் தைலமரக் கன்றுகளை பயிரிட்டுள்ளதே அரிமளம் பகுதி நீர்நிலைகள் நிரம்பாததற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் உள்ள தைலமரக்காடு மாவட்டத்தின் மிகப்பெரிய சமவெளிகாடு ஆகும். இது சுமார் 4.5 ஹெக்டேர் பரப்பளவும், காட்டின் எல்லைப்பகுதியை சுற்றி 80க்கும் மேற்பட்ட கிராமங்களையும் கொண்டுள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன் அரிமளம் காடுகள் அரசமரம், ஆலமரம், வீரமரம், பாலமரம், இளந்தைமரம் உள்ளிட்ட பழம் தரும் மரங்களால் சூழப்பட்டிருந்தது. இதனால் குரங்கு, நரி, மான், காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட காட்டுவிலங்குகள் அதிகளவில் காணப்பட்டது.

காட்டுப்பகுதியில் மழை பெய்து பெருக்கெடுத்து வரும் மழைநீரை முறையான வாய்க்கால் அமைத்து கண்மாய், குளம், ஊரணிகளில் சேமித்து அப்பகுதி கிராமமக்கள் குடிக்கவும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வந்தனர். காடுகளில் மேய்ச்சல் நிலங்கள் அதிகம் இருந்ததால் அப்பகுதி விவசாயிகள் கால்நடைகள் வளர்பதிலும் அதிகஆர்வம் காட்டி வந்தனர். காலப்போக்கில் அரசு வனப்பகுதியை கைபற்றி பழம் தரும் மரங்களை சிறிது சிறிதாக அழிக்க தொடங்கியது. அப்போது அப்பகுதி விவசாயிகள் காடுகளை அழிப்பதால் மழை வளம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுவதோடு கால்நடைகள், வன விலங்குகள் அழியும் நிலை ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் அரசு கால்நடைகள் மேய்ச்சலுக்கு ஒவ்வொரு கிராமத்திற்கும் செடி, கொடிகள் வளராத பயன்படாத நில பகுதியை மேய்ச்சல் நிலங்களாக ஒதுக்கிவிட்டு காட்டை முற்றிலும் அழித்து தைலமரங்களை பயிரிட்டது. தைலமரம் வளர பெரும்பாலும் நிலத்தடி நீரை எடுத்துக் கொள்வதால் இதற்கு தனிப்பட்ட கவனம் ஏதும் தேவையில்லை. அத்துடன் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை பயன்தர கூடியது.

இதனால் அரசு பழம் தரும் மரங்கள் நடுவதை தவிர்த்து தைலமரங்களை காடு முழுவதும் அதிமுக ஆட்சியின் போது நடவு செய்தது. இதனால் வன விலங்குகளுக்கு போதுமான நீர், உணவு இல்லாமல் கிராமங்களுக்குள் செல்ல தொடங்கியது. அப்போது பெரும்பாலான மான்கள் நாய்களுக்கு இறையாகி அழிய தொடங்கியது. மேலும் காட்டில் வாழும் குரங்குகள், மயில்கள் உணவின்றி குடியிறுப்பு பகுதிகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை அழித்து வருகிறது.

இந்நிலையில் காட்டில் உள்ளநீர் வெளியேறாமல் இருக்க அதிகாரிகள் இயந்திரம் கொண்டு காட்டுப்பகுதியில் பள்ளம் வெட்டி மண்ணாலான தடுப்பு அணைகள் ஏற்படுத்தியுள்ளனர். இதனால் மழைநீர் காட்டை விட்டு வெளியேறுவது தடுக்கப்பட்டுகாட்டில் பெய்யும் மழைநீரை நம்பியே இருந்த அரிமளம் பகுதி நீர்நிலைகள் நீரின்றி காய தொடங்கியது. தற்போது மழைகாலம், வறட்சிகாலம் எனபாகுபாடின்றி அனைத்து காலங்களிலும் அரிமளம் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நீரின்றி உள்ளது.

இதனால் அப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டதோடு மக்கள், கால்நடைகள் குடிநீர் கிடைக்காமல் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அரிமளம் காட்டில் இருந்து மழைநீர் வெளியேறும் நீர்வரத்துவாரிகளை அழித்து கட்டப்பட்டுள்ள அனைத்து தடுப்பணைகளையும் உடனே அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுபற்றி அரிமளத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:

காடுகள் என்பது மக்கள், வனவிலங்குகளுக்கு பயன்படுவதாக இருக்க வேண்டும். தைலமரகாடுகளால் அதனை சார்ந்து வாழும் மக்கள், விலங்குகளுக்கு எந்தபயனும் இல்லை. தைலமரங்கள் 500 அடிஆழம் வரைசென்று நீரை உறிஞ்சிவாழ கூடியது. எங்கள் முன்னோர்கள் அரிமளம் காட்டுப்பகுதியில் உள்ள ஒவ்வொரு மரங்களையும் கடவுளாக வணங்கி வீரபழம், பாலபழம் உள்ளிட்ட பழங்களை உண்டு வாழ்ந்தவர்கள். ஆனால் இன்று அங்குவாழும் உயிர்களுக்கு கூட உணவில்லாமல் காடுகள் கார்ப்பரேட் கம்பேனிகளுக்கு விலைபோயி பழம் தரும் மரங்கள் அழிக்கப்பட்டு தைலமரங்களாக நடவு செய்யப்படுகிறது. இப்பகுதி மக்கள் காட்டைச் சார்ந்தே வாழுகிறோம்.

தற்போது காடு மூலம் எங்களுக்கு எந்தபயனும் கிடைக்கவில்லை. மாறாக காட்டில் வெளியேறும் மழைநீரை அதிகாரிகள் தடுப்பணை கொண்டு தடுத்து அரிமளம் பகுதியில் வறட்சியை ஏற்படுத்தி விட்டனர். இதனால் எங்கள் பகுதி நீர்நிலைகள் வறண்டு, விவசாயநிலங்கள் சீமைகருவேல மரங்கள் முளைத்து வீணாகிவிட்டது. இது போன்றபாதிப்புகள் வரும் என தெரிந்த 25 ஆண்டுகளுக்கு முன் எங்கள் பகுதி மக்களை திரட்டி நுகர்வோர் குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி போராடினோம், அதிகாரிகள் எங்களின் கோரிக்கையை புறக்கணித்து விட்டனர். அதன் விளைவைதான் தற்போது அரிமளம் பகுதி விவசாயிகள் மக்கள் நீரின்றி தவித்து வருகின்றனர் என்றனர்.

Related Stories: