வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்

மாமல்லபுரம்: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார மீனவ குப்பங்களில் நேற்று காலை திடீரென பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டு, கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. வங்க கடலில், உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாமல்லபுரம் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியது.இந்நிலையில், மாமல்லபுரத்தில் கடந்த ஒரு வாரமாக விட்டு, விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் புராதன சின்னமான கடற்கரை கோயிலை சுற்றி மழை நீர் தேங்கி வெறியேற முடியாமல் வெள்ளக் காடு போல் காட்சியளிக்கிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாமல்லபுரம் சுற்றுலாத் தலத்தை மூட செங்கல்பட்டு கலெக்டர் ராகுல் நாத் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, தொல்லியல் துறை அதிகாரிகள் நேற்று காலை வெண்ணெய் உருண்டைபாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் புராதன சின்னங்களை மூடி பார்வையாளர்கள் கண்டு களிக்க தடை விதித்தனர். இந்நிலையில், மாமல்லபுரத்தில் நேற்று காலை திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டு கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதனால், மாமல்லபுரம் குப்பம், தேவனேரி, கொக்கிலமேடு குப்பம், வெண்புருஷம், புதிய கல்பாக்கம், புதுஎடையூர்குப்பம், பட்டிபுலம் குப்பம், நெம்மேலிகுப்பம் ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடற்கரைக்கு வந்த உள்ளூர் மக்கள் சிலர், சீறிபாயும் அலைகளை ஆச்சரியத்துடன் பார்த்து தங்கள் மொபைலில் புகைப்படம் எடுத்தனர். குறிப்பாக, 10 அடி உயரத்துக்கு ராட்சத அலை கரைப்பகுதி வரை நோக்கி வந்தன. மாமல்லபுரம், கடற்கரையில் தற்போது மணிக்கு 40 கிமீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. அவ்வபோது, மழையும் விட்டு, விட்டு பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் அலையில் சிக்கிய தங்களது படகுகளை மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து கயிறு கட்டி நிறுத்தி உள்ளனர். இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் கூறுகையில், ‘கடற்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வந்து தங்க வேண்டும். அதேபோல், மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களை தங்க வைக்க தேவனேரி அரசுப் பள்ளி, மாமல்லபுரம் அரசுப் பள்ளி, கொக்கிலமேட்டில் இரண்டு சமுதாயக் கூடம், கடம்பாடி அரசுப் பள்ளிகளில் மின்சார வசதி, குடிநீர் வசதி கழிப்பறை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது. மேலும், வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர்கள் மாமல்லபுரத்தில் முகாமிட்டுள்ளனர்’ என்றார்.  

சாலையில் சாய்ந்த மின் கம்பம்: மாமல்லபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் ஸ்ரீ கருக்காத்தம்மன் கோயில் உள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து இந்த சாலை வழியாகத்தான் திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீகருக்காத்தம்மன் கோயில் அருகே 10 ஆண்டுகளுக்கு முன்பு மின் வாரியம் மூலம் மின் கம்பங்கள் நடப்பட்டன. நேற்று மாலை, பலத்த மழையுடன் காற்று வீசியது. அப்போது, அங்கிருந்த ஒரு மின் கம்பம் திடீரென சாய்ந்து சாலையில் விழுந்தது. அப்போது, அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக மாமல்லபுரம் மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விரைந்து வந்த மின் வாரிய ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால், பூஞ்சேரி பகுதி மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது.

மீனவர்களின் குடியிருப்பில் மழைநீர்

திருக்கழுக்குன்றம்:  தொடர் கனமழை காரணமாக திருக்கழுக்குன்றம்  ஒன்றியத்திலுள்ள பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. இதனால், வயல்வெளிகளில் மழை நீர் நிரம்பி பயிர்கள் சேதமடைந்துள்ளன. கல்பாக்கம், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், கடலூர் பெரிய குப்பம், சின்ன குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. கடல் அலை வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ளதால் சில இடங்களில் கரையை தாண்டி கடல் நீர் மீனவர்களின் குடியிருப்பு பகுதியில் செல்கிறது. இதனால், மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

தொடர்ந்து குளிர்ந்த காற்றுடன் மழை பெய்து வருவதால் புதுப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது. அதேப்போல் கல்பாக்கம் அடுத்த உய்யாலி குப்பம், புதுப்பட்டினம் குப்பம் உள்ளிட்ட கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை அப்பகுதிகளில் உள்ள சமுதாய கூடம், பள்ளிக்கூடம் உள்ளிட்டவைகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மாவட்ட ஆதிதிராடர் நல அலுவலர் தமிழ்செல்வி, திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், துணை தாசில்தார் மணிவண்ணன் ஆகியோர் நேரில் சென்று போர்வை உள்ளிட்ட உதவிகளை வழங்கினர்.

Related Stories: