ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: இந்திய அணி கேப்டன் விவேக்

புவனேஸ்வரம்: இந்தியாவில் நடைபெற உள்ள ஜூனியர்  உலக கோப்பை  ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற விவேக் சாகர் நியமிக்கப்பட்டு உள்ளார். ஒடிஷா தலைநகர்  புவனேஸ்வரத்தில் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கித் தொடர் நடைபெற உள்ளது. நடப்பு சாம்பியன் இந்தியா, பிரான்ஸ், அர்ஜென்டீனா, மலேசியா,  எகிப்து, பாகிஸ்தான் உட்பட 16 நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டி நவ.24ம் தேதி முதல் டிச.6ம் தேதி வரை நடக்கும். இந்நிலையில் உலக கோப்பையில் பங்கேற்க உள்ள  இந்திய அணியின் கேப்டனாக விவேக் சாகர் பிரசாத்(21) நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்  வெண்கலம் வென்ற இந்திய அணியில் விளையாடியவர். அதுதவிர ஏற்கனவே பல ஆட்டங்களில் இந்திய சீனியர் அணிக்காக ஆடியிருக்கிறார். அவரது அனுபவம் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று பயிற்சியாளர் கிரஹம் ரீட்  தெரிவித்துள்ளார். ‘கூடவே 2018ம் ஆண்டு நடந்த   ஜூனியர் ஒலிம்பிக் போட்டியில்  வெள்ளி வென்ற இந்திய அணியில்  இடம் பெற்ற சஞ்ஜெய்  துணைக் கேப்டனாக இருப்பார்’ என்று இந்திய  ஹாக்கி கூட்டமைப்பு(எப்ஐஎச்)  நேற்று தெரிவித்துள்ளது.

மேலும் பயிற்சியாளர் கிரஹம் ரீட், ‘ ஒன்றை ஆண்டுகளுக்கும் மேலாக  கொரோனா, ஊரடங்கு என பல்வேறு சிக்கலுக்கு இடையில் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர். கூடவே  அணிக்காக  எதையும் செய்ய தயாராக இருக்கும் வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களில் இருந்து 18பேர் கொண்ட இந்திய அணியைதேர்வு செய்வது உண்மையில் கடினமான விஷயம்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: