70 குழந்தைகள் பலியான சர்ச்சை உபி அரசு டாக்டர் கபீல்கான் டிஸ்மிஸ்: பிரியங்கா எதிர்ப்பு

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக கபீல்கான் பணியாற்றி வந்தார். கடந்த 2017ம் ஆண்டு ஆக்சிஜன் பற்றாக்குறையால் இந்த மருத்துவமனையில் 70 குழந்தைகள் உயிரிழந்தனர். இதையடுத்து பணியில் அலட்சியமாக இருந்ததாக கபீல்கான் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். அவரை சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. பணியிலும் சேர்க்க உத்தரவிட்டது.

இந்நிலையில், குழந்தைகள் இறந்தது பற்றி விசாரித்த விசாரணை குழு, தனது பணியில் கபீல்கான் அலட்சியமாக இருந்ததாக குற்றம்சாட்டி உள்ளது. இதையடுத்து, நேற்று அவர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார். இம்மாநில மருத்துவ கல்வி முதன்மை செயலாளர் அலோக்குமார் கூறுகையில், ‘கபீல்கான் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவரை அரசு பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,’ என்றார். இதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘டாக்டரின் பதவி நீக்கம் தீங்கிழைக்கும் செயல், அவரை துன்புறுத்துவதை நோக்கமாக கொண்டது,’ என்று கண்டித்துள்ளார். 

Related Stories:

More