ஆந்திர மாநில காடுகளில் போலீசாரை கொல்ல மூங்கில் மரணகுழி: மாவோயிஸ்ட்டுகள் புது டெக்னிக்

திருமலை: ஆந்திர காடுகளில் சமீப காலமாக மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகமாகி இருக்கிறது. இவர்களை பிடிப்பதற்காக போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்நிலையில, ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் எஸ்பி ரவீந்திரநாத் பாபு உத்தரவின் பேரில், ஆந்திரா- சட்டீஸ்கர் மாநில எல்லையான மல்லம்பேட்டா வனப்பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது சிந்தூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். மோப்ப நாய்கள் மூலம் நடத்திய சோதனையில், போலீசாரை கொல்வதற்காக மாவோயிஸ்ட்டுகளால் நிலத்தில் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டு,  கூரிய மூங்கில் குச்சிகள் நட்டு வைக்கப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

வனப்பகுதியில் போலீசார் செல்லும் பாதைகளில் பள்ளம் தோண்டி, மூங்கிலை ஈட்டி போன்று கூர்முனைகளுடன் செதுக்கி, அவற்றை குழித்தோண்டி புதைத்து, அவை தெரியாத வகையில் கோணி பைகள் போட்டு, இலைகளல் மூடி வைத்து இருந்தனர். போலீசார் அவற்றை பார்க்காமல் மிதித்து விட்டால், குழியில் விழுந்து மூங்கில் குச்சிகளால் குத்தப்பட்டு உயிரிழக்க நேரிடும். வாகனங்கள் இந்த பள்ளத்தில் சிக்கினாலும் டயர்கள் பழுதடைந்து விடும். உடனே, மாவோயிட்டுகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு  இருந்துள்ளனர்.

மாவோயிஸ்டுகள் இங்கு இருப்பதாக முன்கூட்டியே கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்ய சென்றதால், உஷார்நிலையில் இருந்தனர். அதனால்தான், இந்த மூங்கில் குச்சி மரணகுழிகளை கண்டுபிடித்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், உரிய நேரத்தில் அவை கண்டுபிடிக்கப்பட்டு அகற்றியதால் உயிர் பலி தவிர்க்கப்பட்டது.

Related Stories: