×

சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லும் ஹஜ் பயண நடைமுறை தொடர வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதம்: சமீபத்தில் ஒன்றிய அரசின் ஹஜ் கமிட்டி வெளியிட்டுள்ள ஹஜ் அறிக்கையில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள குறிப்பிட்டுள்ள விமான நிலையங்களின் பெயர் பட்டியலில் சென்னை விமான நிலையத்தின் பெயர் இடம்பெறவில்லை. 2019ம் ஆண்டில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் இருந்து 4500க்கும் மேற்பட்ட ஹஜ் யாத்ரீகர்கள் சென்னையில் இருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் இருந்தும் யாத்ரீகர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணம் மேற்கொண்டுள்ளனர். தற்போது தமிழ்நாட்டை சேர்ந்த யாத்ரீகர்கள் விமானம் ஏறும் இடமாக கேரளாவில் உள்ள கொச்சி விமான நிலையம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது யாத்ரீகர்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கும்.

மேலும், இதுகுறித்து தனக்கு ஏராளமான கோரிக்கைகள் இஸ்லாமிய சமூகத்தினர், பொதுமக்கள், பல்வேறு அரசியல் குழுக்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக வந்துள்ளது. ஹஜ் யாத்திரை பெரும்பாலான யாத்ரீகர்களுக்கு சவாலாக உள்ள நிலையில், சென்னையில் இருந்து சுமார் 700 கி.மீ. தொலைவில் உள்ள கொச்சி நகரை புறப்படும் இடமாக அறிவிக்கப்பட்டதை மாற்றி, யாத்ரீகர்களுக்கு பயனளிக்கும் வகையில், இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தியாவின் நான்காவது பெரிய பெருநகரமாக விளங்கிடும் சென்னை விமான நிலையத்தில் இருந்து தொடர்ந்து வழக்கம்போல புறப்படும் வகையில் அனுமதி வழங்கிட தொடர்புடைய துறையினருக்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Chennai Airport ,Mi. Q. Stalin , Chief Minister MK Stalin's request to the Prime Minister to continue the Hajj journey from Chennai Airport
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்