வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரை கடந்தது: 24 மணி நேரம் மழை கொட்டித் தீர்த்தது; அதிகனமழைக்கு வாய்ப்பு குறைந்ததால் ரெட் அலர்ட் விலக்கிக்கொள்ளப்பட்டது

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை சென்னை அருகே கரையைக் கடந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலோரப் பகுதியில் நிலை கொண்டு இருந்ததால் தமிழகத்தில் சென்னை முதல் நாகப்பட்டினம் வரை நேற்று முன்தினம் முதல் நேற்று வரை 24 மணி நேரம் மழை பெய்தது. இதனால் பெரும்பாலான மாவட்டங்கள் மழை வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளன. சென்னையின் புறநகர் பகுதிகள் தீவுகளாய் மாறியுள்ளன. தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

இதையடுத்து, தென் கிழக்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதால் கடந்த 6ம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது.  இரண்டாவதாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று  வந்ததால் வட தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தது. இந்த தொடர் மழை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரின் வட பகுதியில் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் புகுந்து மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, உணவு, மருத்துவ வசதிகளை அரசு செய்து வருகிறது. இருப்பினும் இன்னும் பெரும்பாலான இடங்களில் மழை நீர் வடியாமல் குளம் போல தேங்கியுள்ளது. அங்கு மின் மோட்டார்களை பயன்படுத்தி மழை நீரை வெளியேற்றும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகள் மழை பாதிப்புகளை தவிர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விளை நிலங்களை மழை நீர் சூழ்ந்துள்ளது.

தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 9ம் தேதி இரவு தீவிர ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னைக்கு 170 கிமீ தொலைவில் மையம் கொண்டது. அதன் காரணமாக 10ம் தேதி   இரவு 8 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது. அதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் என கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. தாம்பரம் பகுதியில் நேற்று முன்தினம் ஒரே நாள் மழையில் 23 செமீ மழை பதிவானது. சென்னையில் நேற்று முன்தினம் மதியம் ஒரு மணிக்கு தொடங்கி நேற்று மதியம் ஒரு மணி வரை வரை மழை பெய்து கொண்டே இருந்தது.

இதனால் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கின. 11 சுரங்கப்பாதைகள் முழுதும் மழை நீர் நிரம்பியதால் அவை உடனடியாக மூடப்பட்டன. அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு வேறு பாதைகளில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.  மேலும், பல பகுதிகளில் போக்கு வரத்து தடை செய்யப்பட்டது. வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்,  கடலூருக்கு அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு புதுச்சேரிக்கு வடக்கே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் 10 மற்றும் 11ம் தேதிகளில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதனால், தமிழகத்தில் 20 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.  மிக கனமழை பெய்யும் என்று அரசு அறிவித்ததால் பெரும்பாலான மாவட்டங்களில் பொதுமக்கள் வெளியில் வராமல் வீடுகளில் முடங்கினர்.

இதற்கிடையே, தென் மேற்கு வங்கக் கடலில் சென்னைக்கு  தென் கிழக்கே 170 கிமீ, புதுச்சேரிக்கு கிழக்கே 170 கிமீ தொலைவில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றின் திசை மாறுபாட்டால் மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து சென்று தெற்கு ஆந்திரா மற்றும் சென்னையின் வடக்கு பகுதியை நேற்று காலை நெருங்கியது.  இதனால் சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று பகல் ஒரு மணி வரை நல்ல மழை பெய்தது.  சில இடங்களில் மிக கனமழையும் பெய்தது. மணிக்கு 40 கிமீ வேகத்தில் காற்று  வீசியது. பின்னர் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மதியம் 3 மணி அளவில் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிக்கும் சென்னைக்கும் இடையில் தரைப் பகுதியில் நுழைந்தது.  

 அதனால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் மணிக்கு 40 கி.மீ முதல் 45 கி.மீ வரை பலத்த தரைக்காற்று வீசியது. மழையை பொறுத்தவரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் சில பகுதிகளில் அதிகனமழையும் பெய்தது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் முக கனமழை பெய்தது.

கடந்த 6, 7ம் தேதிகளில் பெய்த மழைபோல் தான் நேற்று முன்தினம்  இரவு பெய்த மழை பெய்துள்ளது.

இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டது.  அதற்கேற்ப நேற்று நண்பகல் வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. அதனால்  மேலும் இந்த பகுதிகளில் மழை நீர் கூடுதலாக சேர்ந்தது. அதனால் எங்கும் மழை நீராகவே காட்சி அளிக்கிறது. இந்த அளவுக்கு நீரை கொட்டிய அந்த காற்றழுத்த  தாழ்வு மண்டலம் நேற்று மாலை 4 மணி முதல் 7 மணி வரை 3 கிமீ வேகத்தில் சென்னை அருகே கரையைக் கடந்து திருப்பதி பகுதிக்கு சென்றது. அதற்கு பிறகு அது மெல்ல மெல்ல வலுவிழந்தது. இருப்பினும் மழை மேகம் மற்றும் காற்று சுழற்சி நீடித்து வருதால் இன்றும்  வடதமிழகத்தில் மழை நீடிக்கும். படிப்படியாக மழை பொழிவு நிற்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், அதிகனமழைக்கு வாய்ப்பு குறைந்ததால் ரெட் அலர்ட் விலக்கிக்கொள்ளப்பட்டது.  

* பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

சென்னையில் பெய்து வரும் மழையால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து சென்னை மாவட்ட கலெக்டர் விஜயா ராணி உத்தரவிட்டுள்ளார். அதேபோல, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் நீலகிரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* 11 நாளில் 70.9 செமீ மழை

வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை மழை பெய்யும். அதில் நவம்பர் மாதத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழையைவிட இந்த ஆண்டு நவம்பரில் கூடுதலாக மழை பெய்துள்ளது. கடந்த 1918ம் ஆண்டு நவம்பர் மாதம் 108 செ.மீ. மழை பெய்துள்ளது.  1985 நவம்பர் மாதத்தில் வட கிழக்கு பருவமழையில் 110 செ.மீ. பெய்துள்ளது. 2005ம் ஆண்டில் நவம்பர் மாதம் 104 செ.மீ. பெய்துள்ளது. இந்த நவம்பரில் சென்னை நுங்கம்பாக்கத்தில் 70.9 செமீ மழை பெய்துள்ளது. தற்போது நவம்பர் மாதம் முடிய இன்னும் 19 நாட்கள் உள்ள நிலையில் இயல்பைவிட கூடுதலாக மழை பெய்துவிட்ட நிலையில், வரும் 19 நாட்களில் மேலும் 38 செமீ வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் கடந்த அக்டோபர் மாதம் முதல் நேற்று வரை 54 சதவீதம் மழையும், சென்னையில் 77 சதவீதம் மழையும் பெய்துள்ளது.

* 24 மணி நேரத்தில் 127 மி.மீட்டர் கொட்டியது

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னையில் நேற்று முன்தினம் மதியம் முதல் நேற்று மதியம் வரை 24 மணி நேரம் மழை கொட்டியது. நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சென்னையில் மட்டும் 124 மி.மீட்டர் மழை கொட்டியது. அதிக பட்சமாக செங்கல்பட்டில் 127 மி.மீட்டர் பெய்துள்ளது. திருவள்ளூரில் 115.8 மி.மீட்டரும், காஞ்சிபுரத்தில் 74 மி.மீட்டரும், கடலூரில் 31 மி.மீட்டரும், புதுவையில் 34 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது.

Related Stories: