சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழையின் காரணமாக விழுந்த 45 மரங்கள் உடனடியாக அகற்றம்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழையின் காரணமாக விழுந்த 45 மரங்கள் மாநகராட்சி பணியாளர்களால் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், நேற்று இரவு முதல் கனமழையானது அதிக காற்றுடன் வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள் மற்றும் அதன் கிளைகள் சாய்ந்துள்ளன.

மாநகராட்சியின் சார்பில் பருவமழை காலத்திற்கு முன்னதாகவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் விழும் நிலையில் உள்ள மரக்கிளைகளை அகற்ற ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்ற 6 நவீன ஹைட்ராலிக் இயந்திரங்களும், 2 மரம் அறுக்கும் இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் 15 மண்டலங்களிலும் உள்ள 371 கையினால் இயக்கும் மர அறுவை இயந்திரங்களும் ஏற்கனவே அந்தந்த வார்டுகளில் தயார்நிலையில் இருந்தது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக 45 இடங்களில் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் சாய்ந்துள்ளன. போக்குவரத்திற்கு இடையூறாக சாய்ந்துள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி, காவல் துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மழையின் காரணமாக 45 இடங்களில் விழுந்த மரங்கள் மற்றும் மரக்கிளைகளில் உடனடியாக 31 இடங்களில் அகற்றப்பட்டு போக்குவரத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 இடங்களிலும் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் சாலைகளிலிருந்து அகற்றப்பட்டு தற்பொழுது அவ்விடங்களிலிருந்து மரக்கிளைகளை வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Related Stories:

More